வன்னிவேடு அகத்தீஸ்வரர் கோவிலில் அம்மன் தாலி தங்கச் சங்கிலி கொள்ளை – சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர், அம்மன் கழுத்தில் இருந்த தாலி தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கோவில் உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
வன்னிவேடு கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அருள்மிகு புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் கோவில் செயல்பட்டு வருகிறது.
இக்கோவிலில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர், கோவிலின் கதவுகளை உடைத்து உள்ளே சென்றுள்ளார். பின்னர், அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தாலி தங்கச் சங்கிலியைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தொடர்ந்து, கோவிலில் இருந்த உண்டியலையும் உடைத்து, அதிலிருந்த காணிக்கைப் பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
மேலும், கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் கோவிலுக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி தங்கச் சங்கிலியைத் திருடுவதும், உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்வதும் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையே, இக்கோவிலில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகப் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, கோவிலில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, பாதுகாப்பை பலப்படுத்த இந்து சமய அறநிலையத்துறையும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: ரூ.60.70 லட்சம் பறிப்பு – வங்கிக் கணக்குகளை விற்ற 3 பேர் கைது!
