நாட்டையே பரபரப்பாக்கிய அதுல் சுபாஷ் தற்கொலை விவகாரத்தில் தலைமறைவாக இருந்த அதுல் சுபாஷின் மனைவி நிகிதா, அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு போலீசார் குருகிராமில் அதுலின் மனைவி நிகிதா சிங்கானியாவை கைது செய்தனர்.
பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய அதுல் சுபாஷ் (34) கடந்த 16-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு, 24 பக்கங்களில் தற்கொலைக்கான காரணத்தை விவரிக்கும் கடிதமும், 90 நிமிடங்கள் அவர் பேசும் வீடியோவையும் வெளியிட்டார்.
அதில் தன் மனைவி நிகிதா சிங்காரியாவுடனான விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சமாக ரூ.3.3 கோடி கேட்டு துன்புறுத்தியது, தன் 3 வயது மகனை காண்பிக்காமல் பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.40 ஆயிரம் கோரியது, பொய் வழக்குகளை தொடுத்து தொல்லை கொடுத்தது, வழக்கை தீர்க்க நீதிபதி ரீட்டா கவுசிக் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டது ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மறைந்த அதுல் சுபாஷின் சகோதரர் விகாஷ், நிகிதா சிங்காரியா, அவரது தாய், சகோதரர் ஆகியோருக்கு எதிராக புகார் அளித்தார். இதையடுத்து மாரத்தஹள்ளி போலீஸார் நிகிதா சிங்காரியா, அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் 3 நாட்களுக்குள் விசாரணை அதிகாரி முன் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின் மூவரையும் அழைத்து செல்ல பெங்களூரு போலீசார் தயாராகி வருகின்றனர். முன்னதாக, சிங்கானியா மற்றும் அவரது மாமியார் உள்ளிட்டோர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.