தமிழகத்தில் கடந்த வருடம் மட்டும் 60 ஆயிரத்து 620 சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் வந்துள்ளது, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சைபர் கிரைம் புகார்கள் பலவிதமாக வருகின்ற சூழலில் தற்போது புதிதாக அதிகளவில் ஆன்லைன் மோசடி ஒன்று நடந்து வருகிறது.

இந்த புகாரை பொறுத்தவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, நீங்கள் அனுப்பிய பார்சலில் போதைப்பொருள் இருப்பதாகவும், பாஸ்போர்ட், சிம் கார்டு உள்ளிட்ட பொருட்கள் இருப்பதாகவும், இதனை காவல்துறையினர் கண்டுபிடித்து விட்டதாக கூறி தொடர்பு கொண்டு பேசுவதாகவும், அதனைத் தொடர்ந்து காவல்துறையிடம் பேசுமாறு அந்த தொலைபேசி இணைப்பை மாற்றுவார்கள், அதில் காவல்துறை அதிகாரிகள் பேசுவது போல வாக்கி டாக்கி சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
பின்னர் உங்களது ஆதார் எண் மற்றும் வங்கி கணக்குகள் எல்லாம் சரியாக இருப்பதாக தெரிவித்தவுடன், பொதுமக்களும் உடனடியாக அவர்களுடைய ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை சரி பார்த்துவிட்டு ஒன்றாக இல்லை என கூறிய போதும், நீங்கள் உடனடியாக காவல் நிலையம் வர வேண்டும் என அழைப்பு விடுப்பார்கள்.
பதட்டத்தில் பொதுமக்களும் எங்களால் வர இயலாது என தெரிவித்தவுடன் அவர்களே உதவுவது போல வழக்கறிஞர் உங்களுக்கு உதவி செய்வார் என அவரிடம் தொலைபேசியை கனெக்ட் செய்வார்கள். அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் போல பேசும் நபர் தங்களுக்கு உதவ வேண்டுமென்றால் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் காவல்துறையிடம் இருந்து தப்பித்து விடலாம் என தெரிவிப்பார்கள்.
இதனை நம்பி ஒரு லட்சம் செலுத்திய பிறகு இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்துவிட்டது ஆகவே நீங்கள் நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என மீண்டும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, அதிலிருந்து வெளிவருவதற்கு ஐந்து லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை கட்ட வேண்டும் என ஆன்லைன் மூலமாக பணப்பறிப்பில் ஈடுபடும் கும்பல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இதுபோன்று 70 கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 60 ஆயிரத்து 620 சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் வந்துள்ளதாக அவர் கூறினார்.
ஆகவே பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.