ஆவடியில் நூதன முறையில் மோசடி செய்த இன்ஜினியர் கைது
சென்னையில் விஞ்ஞானி என்று கூறி நூதன முறையில் மோசடி செய்த இன்ஜினியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொரட்டூரைச் சேர்ந்த ரகுநாத் ராமசாமி (60) என்பவர் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், சென்னை கொளப்பாக்கத்தைச் சேர்ந்த பி.ஆர். சம்பத் (74) என்பவர் மற்றும் அவரது மனைவி கீதா (65) சம்பத்தும் பல வருடங்களாக எனக்கு பழக்கமானவர்கள்.
அவர்கள், தன் மகன் அரவிந்த் சம்பத் “டாபி” என்ற நிறுவனத்தில் மெக்கானிக் இன்ஜினியராக பணிபுரிந்து வருவதாகவும், அவர் புதியதாக “மிஷின்” ஒன்றை கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கான காப்புரிமை மூலம் ரூபாய்.100 கோடி அளவிலான பணம் வர உள்ளதாகவும், மேற்படி அந்த 100 கோடி ரூபாய் காப்புரிமை தொகையை பெற வேண்டுமென்றால் வங்கியில் பிணைத் தொகை (டெப்பாசிட்) கட்ட வேண்டும் என்றும், கண்ணீருடன் தெரிவித்தனர். அதற்கான பணத்தை கொடுத்து உதவி செய்தால் ஒரு சில மாதங் களில் திருப்பி கொடுத்துவிடுவதாக கெஞ்சிக் கேட்டதாகவும்,
பி.ஆர்.சம்பத் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் கெஞ்சி கேட்டுக் கொண்டதை நம்பி அவர்களுக்கு உதவி செய்ய தான் முன் வந்து அண்ணாநகர் ஆக்சிஸ் வங்கி மூலம் ரூபாய். 26,31,500 கடனாக ரகுநாத் ராமசாமி கொடுத்துள்ளார்.
பி.ஆர்.சம்பத் மற்றும் அவரது மனைவி கீதா சம்பத்தும் குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவதாக கூறியதை நம்பி பணத்தை கொடுத்ததாகவும், அந்த பணத்தை பல முறை கேட்டும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக புகாரில் கூறியுள்ளார்.
மேலும், சந்தேகம் அடைந்த ரகுநாத் ராமசாமி, இது குறித்து விசாரித்தபோது அவருடைய மகன் டாபி நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது.
பி.ஆர்.சம்பத் அவரது மனைவி கீதா காட்டிய ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பதை அறிந்து கொண்டார். பி.ஆர்.சம்பத் அவரது மனைவி கீதா மற்றும் அவர்களது மகன் அரவிந்த்சம்பத் (39) மற்றும் அரவிந்துடன் இருக்கும் ஜெனிபர்நிஷா ஆகியோர் கூட்டு சதி செய்து ஏமாற்றிவிட்டதாக ரகுநாதன் ராமசாமி ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் அடிப்படையில், துணை ஆணையர் பெருமாள் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் மைனர்சாமி ஆகியோர் நடத்திய விசாரணையில் அரவிந்த் சம்பத் மோசடி செய்தது தெரியவந்தது.
அரவிந்த் சம்பத்தை போலிசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், சம்பத், அவருடைய மனைவி கீதா உள்ளிட்ட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.