கிண்டி, செங்கல்பட்டில் பாலியல் வன்கொடுமை: வடபழனி அனைத்து மகளிர் காவல் துறை அதிரடி நடவடிக்கை!
சினிமாவில் கதாநாயகியாக வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, தொலைக்காட்சித் தொடர் நடிகையை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி நகைப் பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சென்னை மற்றும் சின்னத்திரை, சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலி வாக்குறுதி அளித்து வலைவீச்சு
சென்னை கே.கே. நகர் பகுதியில் வசித்து வரும் 38 வயது மதிக்கத்தக்க பிரபல சீரியல் நடிகை ஒருவர், கணவரைப் பிரிந்து தனது மகன் மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார். இவருக்குக் கடந்த 2025-ஆம் ஆண்டு தோழி ஒருவர் மூலமாக ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஷேக் முத்தலிப் (40) என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஷேக் முத்தலிப், தனது நண்பர் சுரேஷ் கண்ணா நடத்தி வரும் அமைப்பு மூலம் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கி வருவதாகவும், இந்த ஆண்டு அந்த விருதிற்கு நடிகை தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், சினிமாத்துறையில் முன்னணி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தனக்கு நண்பர்கள் என்பதால், திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் கூறி நடிகையை நம்பவைத்துள்ளார். இதனை உண்மை என நம்பிய நடிகையும் அவருடன் பழகத் தொடங்கியுள்ளார்.
மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை
கடந்த ஏப்ரல் மாதம், விருது வழங்குவதாகக் கூறி ஷேக் முத்தலிப் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் கண்ணா ஆகியோர் நடிகையைக் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். வழியில் அவர்கள் கொடுத்த குளிர்பானத்தைக் குடித்த சிறிது நேரத்தில் நடிகை மயக்கமடைந்துள்ளார். அந்தச் சமயத்தில் கிண்டி அருகே காரில் வைத்து ஷேக் முத்தலிப் பாலியல்ரீதியாக அத்துமீறியுள்ளார்.
அதன் பிறகு, செங்கல்பட்டு அடுத்த சித்தாமூர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து நடிகையை மிரட்டி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இருவரும் நெருக்கமாக இருந்ததைப் புகைப்படம் மற்றும் வீடியோவாக ஷேக் முத்தலிப் தனது செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார்.
ரூ.2 லட்சம், 11 பவுன் நகை பறிப்பு – குற்றவாளி சிக்கியது எப்படி?
பின்னர் அந்த ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி, நடிகையிடமிருந்து ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 11 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இதனால் கடும் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்த நடிகை, இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முக்கியக் குற்றவாளியான ஷேக் முத்தலிப்பை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளி சுரேஷ் கண்ணாவை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
