நட்பாக பழகியதை நம்பி பெண் கொடுத்ததால் ஏற்பட்ட விபரீதம். 11 மாதங்களே ஆன நிலையில் பெண் சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் மகள் தற்கொலையால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக அணைக்கட்டு சிறப்பு அணைக்கட்டு பெண் எஸ்ஐ மீது பள்ளிகொண்டா போலீசில் புகார் அளித்துள்ளனா்.வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்து ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ண மூர்த்தி (வயது 55) விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு பேபி ஷாமினி (வயது 23) என்ற மகளும் விஷ்ணு மகாராஜன் என்ற மகனும் உள்ளனர். பேபி ஷாமினி பிசியோதெரபி படித்துள்ளார்.
அதேபோல் பள்ளிகொண்டா கேமரான் பேட்டை பகுதியைச் சேர்ந்த சிறப்பு பெண் உதவி காவல் ஆய்வாளர் பிரியா குமாரி அவரது கணவர் ஜெயவேந்தன் இவர்களுக்கு ரோகித் (வயது 26) என்கிற மகன் உள்ளார். இந்நிலையில் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக உள்ள ஜெயந்தியுடன் மற்றொரு உதவி காவல் ஆய்வாளர் பிரியா குமாரியும் வேலை பார்த்து வந்த போது நட்பாக பழகி வந்துள்ளனர்.

மேலும், பிரியாகுமாரி தனது மகன் ரோகித்துக்கு திருமணம் செய்ய பல இடங்களில் பெண்கள் தேடியுள்ளார். அப்போது தனது உடன் பணியாற்றும் ஜெயந்தியின் மகள் படிப்பை முடித்துள்ளார். இதனால் தன் மகனுக்கு பெண் தருமாறு பிரியா குமாரி ஜெயந்தியிடம் கேட்டபோது, தன் நண்பியின் மகனுக்கு பெண் தர எந்த எதிர்பார்ப்புமின்றி சம்மதித்து கடந்த 02.6.2024 அன்று திருமணம் செய்து வைத்துள்ளனர்.
அப்போது, ஜெயந்தி பெண்ணுக்கு 50 சவரன் நகை 16 லட்சம் மதிப்புள்ள ஒரு சொகுசு காரும் வழங்கியுள்ளார். இந்நிலையில், ரோகித் குடி மற்றும் பெண்களுடன் தகாத உறவுகளில் ஈடுபட்டு வருவது திருமணம் முடிந்து 15 வது நாளிலேயே பேபி ஷாமினுக்கு தெரிய வந்தது. இது குறித்து, பேபி ஷாமினி தன் தாயார் ஜெயந்தியிடம் கூறியுள்ளார். ஜெயந்தி தன் நண்பியின் மகனுக்கு மகளை திருமணம் செய்து கொடுத்ததால் செய்வதறியாது மகளுக்கு அறிவுரை கூறி நாளடைவில் சரியாகிவிடும் என சமாதானம் செய்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து இதே போல் ரோகித் பேபி ஷாமினியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதே போல் கடந்தாண்டு தீபாவளியின் போது பேபி ஷாமினியை ரோகித் அடித்ததால் இரண்டு மாத கருவும் கலைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் பிரியா குமாரியும் வரதட்சணை கேட்டு வசை பாடியதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரு மாதம் தன் தாய் வீட்டிற்கு பேபிஷாமினி வந்து இருந்துள்ளார். இந்நிலையில், தேவேந்திரன் மற்றும் பிரியாகுமாரி ஆகியோர் ஜெயிந்தியிடம் சென்று சமாதானம் பேசி மீண்டும் மருமகளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து நேற்று மீண்டும் ரோகித் மற்றும் அவரது தாயார் பிரியாகுமாரி கார் மற்றும் 50 சவரன் நகையை கொண்டு வரும் படி பேபிஷாமினியை அடித்து துன்புறுத்தியதுடன் துணிமணிகளை எடுத்து வீட்டின் வெளியே வீசியுள்ளனர்.
இதில், இரவு முழுவதும் மன உளைச்சலில் இருந்த பேபி ஷாமினி இன்று காலை அவரது தம்பியான விஷ்ணுமகாராஜனுக்கு போன் செய்து தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். உடனே விஷ்ணு மகாராஜன் காரை எடுத்துக்கொண்டு தான் அக்காவை ஒதியத்தூருக்கு அழைத்து சென்றுள்ளார். வீட்டிலிருந்த அப்பா மற்றும் பெரியோர்கள் சமாதானம் செய்து ஓய்வு எடுக்கும்படி கூறிவிட்டு அவர்களது பணிகளை பார்க்க சென்றுள்ளனர்.
இந்நிலையில் பகல் 12 மணிக்கு வீடியோ காலில் தன் கணவருடன் பேசிவிட்டு அவர் தங்கி இருந்த அறையில் பட்டுப்பு டவையால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனடியாக அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தொடர்ந்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து பேபி ஷாமினி பெற்றோர் கொடுத்த புகாரில் என் மகளை பிரியகுமாரி மற்றும் தேவேந்திரன் என் மருமகன் ரோகித் ஆகியோர் வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்தி துன்புறுத்தி தற்கொலைக்கு ஈடுபட்டுத்தியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. புகாரை பெற்றுக் கொண்ட பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், திருமணம் ஆகி 11 மாதங்களே ஆன நிலையில் பெண் இறந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் சிறப்பு பெண் உதவி காவல் ஆய்வாளர் பிரியகுமாரி தன் மருமகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.