சேலத்தில் நகைக்கடை வைத்து, கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து தலைமறைவான நகைக்கடை அதிபரை 4 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை.
சேலத்தில் வைத்திருந்த ஐந்து கடைகளுக்கும் அழைத்துச் சென்று ஆவணங்கள் மற்றும் மீதமுள்ள நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாநகர், வீராணம் அடுத்துள்ள வலசையூர் பகுதியை சேர்ந்தவர் சபரிசங்கர். இவர் சேலம், ஆத்தூர், தர்மபுரி, நாமக்கல், திருச்சி உள்பட 11 இடங்களில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் எஸ்விஎஸ் ( SVS ) ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தார். இதில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஆயிரக்கணக்கான பொதுமக்களிடமிருந்து முதலீடுகள் மற்றும் தங்க நகைகள் பெற்றார். இதன் மூலம் 100 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு பெற்றுள்ளார்.
சபரிசங்கர் திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலீடு பெற்ற தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை சுருட்டிக் கொண்டு, கடைகளை பூட்டி விட்டு குடும்பத்துடன் தலைமறைவானார். இதனால் பணம் செலுத்தியவர்கள் கடும் ஏமாற்றத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த பாதிக்கப்பட்ட மக்கள், மோசடி குறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட சபரிசங்கர் மீது தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த சபரிசங்கரை தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் வைத்து சபரிசங்கரை கைது செய்தனர். பின்னர் அவரை கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்,
சபரிசங்கரிடம் விசாரணை நடத்துவதற்காக 4 நாள் காவலில் எடுத்தனர். கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சபரிசங்கரை நேற்று முன்தினம் 4 நாட்கள் காவலில் எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சேலத்தில் உள்ள அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி, வீராணம், ஆத்தூர் தாரமங்கலம் ஆகிய இடங்களில் நடத்தி வந்த நகைக் கடைகளுக்கு சபரிசங்கரை அழைத்துச் சென்ற போலீசார், பூட்டியிருந்த நகைக் கடைகளை திறந்து, கடையில் உள்ள ஆவணங்கள் மற்றும் மீதமிருந்த வெள்ளி மற்றும் தங்க நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
குறிப்பாக இன்று காலை அம்மாப்பேட்டையில் சிங்கமெத்தை அருகே உள்ள எஸ் வி எஸ் நகைக்கடையை திறந்து, அங்கு மீதமிருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் தங்க நகைகள் மற்றும் யார்? யார்? பணத்தை இழந்துள்ளனர் என்பது தொடர்பான பெயர் பட்டியல் அடங்கிய ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர். இதே போல மற்ற நகை கடைகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.