ஆந்திர மாநிலம் அனந்தபூர்மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்(20). இவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். வடபழனி விஜயா போரம் மாலில் செயல்பட்டு வரும் தனியார் மருந்து கம்பெனி ஒன்றில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.
நேற்று அதிகாலை தினேஷ் தன்னுடன் பணியாற்றி வரும் பாஸ்கர் என்பவருடன் தங்கும் விடுதிக்கு சென்று கொண்டிருந்தார். வடபழனி துரைசாமி சாலையில் சென்று கொண்டிருந்த போது கார், மற்றும் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று தினேஷை அடித்து உதைத்து காரில் கடத்திச் சென்றது.
இதனை கண்ட பாஸ்கர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வடபழனி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துஅந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, தீவிரமாக விசாரித்ததில் பணத்தகராறில் ஆந்திர இளைஞர்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில் கடத்தப்பட்ட தினேஷை ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை அருகே போலீசார் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட திருப்பதியை சேர்ந்த பொறியியல் மாணவர் சுரேந்திரன்(21), கடப்பாவை சேர்ந்த பொறியல் மாணவர் மணிகண்டன்(20) ஆகிய இருவரையும் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கடத்தப்பட்ட தினேஷ், கடந்த பிப்ரவரி மாதம் சுரேந்திரனிடம் மூன்று லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து விட்டு, செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு சென்னை வந்து தலைமறைவாகியுள்ளார்.
ஜெயம்கொண்டான் அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 சவரன் கொள்ளை
கடந்த மூன்று மாதங்களாக வடபழனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடன் கொடுத்த சுரேந்திரன், அனந்தபூர் வட்டத்தில் உள்ள தினேஷின் வீட்டிற்கு பலமுறை சென்று பணம் கேட்டுள்ளார். அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளனர்.
இந்த நிலையில் தினேஷின் நண்பர்களிடம் விசாரித்தபோது அவர் சென்னையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனது நண்பர்களுடன் சென்னை வந்த சுரேந்திரன், தினேஷ் பணியாற்றும் இடத்தை நோட்டமிட்டு, அவர் பணி முடிந்து அறைக்கு நடந்து சென்ற போது கடத்திச் சென்றுள்ளார்.
ஆந்திர எல்லைக்குள் சென்றதும் தினேஷின் பெற்றோரை சுரேந்திரன் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டி ஜிபேயில் 40 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார்.
சூலூர் பேட்டை அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது டயர் பஞ்சர் ஆகியுள்ளது. வேறு டயரை மாற்றிக் கொண்டிருக்கும்போது, ரோந்து வந்த ஆந்திர போலீசாரை கண்டதும் காரில் இருந்தவர்கள் தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர்.
சுரேந்திரனும் மணிகண்டனும் மட்டும் சிக்கி உள்ளனர். காரில் இருந்த தினேஷை மீட்டு விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் கடத்தல் கும்பலை தேடிச் சென்ற வடபழனி போலீசார் ஆந்திர போலீசாரை தொடர்பு கொண்டு, சுரேந்திரன், மணிகண்டன் இருவரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட தினேஷிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. கடத்தலில் தொடர்புடைய மேலும் ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.