குமரி, நெல்லை, தூத்துக்குடி என பல மாவட்டங்களில் 6 கொலை வழக்கு உட்பட 27 வழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்ற ரவுடியை தேரூர் பகுதியில் வைத்து பிடிக்க முயன்ற பொழுது காவலரை கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்ற நிலையில் சுசீந்திரம் காவல் ஆய்வாளாரால் சுட்டு பிடிக்கப்பட்டான்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக நடைமுறை படுத்துவதில் காவல்துறை மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி செல்வம் என்பவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் உள்ளது.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த செல்வம் சுசீந்திரம் அருகே தேரூர் நான்கு வழி சாலை அருகே மறைந்து இருப்பதாக சுசீந்திரம் காவல் ஆய்வாளர் ஆதாம் அலிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு சக காவலர்களுடன் சென்ற ஆய்வாளர் ஆதாம் அலி மற்றும் அவர் குழுவினர் ரவுடி செல்வத்தை பிடிக்க முயன்றன.
13 வயது பள்ளி சிறுமி பலாத்காரம்: முன்னாள் நாதக நிர்வாகி உட்பட 9 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு
இதனை கண்ட ரவுடி செல்வம் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து காவலர்களை தாக்க துவங்கினான். இதில் லிபின் பால்ராஜ் என்ற காவலருக்கு கையில் கத்தி குத்து விழுந்து படுகாயம் அடைந்தார். இதனை தொடர்ந்து தப்பி ஓடிய ரவுடி செல்வத்தை சுசீந்திரம் காவல் ஆய்வாளர் ஆதாம் அலி காலில் சுட்டார்.
இதில் கீழே விழுந்த ரவுடியை போலிஸார் மடக்கி பிடித்தார்கள். இதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த காவலர் மற்றும் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி செல்வம் ஆகியோர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். காவலரை தாக்கி விட்டு தப்பி ஓடிய ரவுடியை சுட்டு பிடித்த சம்பவம் காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.