கூடலூர் பகுதியை சேர்ந்த தாசில்தாரிடம் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடியில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டாா்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சிக்கனுமன் வருவாய் துறையில் தாசில்தாராக பணியாற்றி ஓய்வுப் பெற்றுள்ளார். இவருடைய மகன் என்ஜினீரிங் முடித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார். இதை அறிந்த நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கரியமலை பகுதியை சேர்ந்த சோமு என்பவர் சிக்கனுமனை தொடர்பு கொண்டு அவருடைய மகனுக்கு ரயில்வேதுறையில் வேலை வாங்கி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். அதற்கு பல லட்சங்கள் செலவாகும் என்று கூறியுள்ளார்.

எப்படியாவது மகனுக்கு வேலை கிடைத்தால் போதும் என்ற ஆசையால் சிக்கனுமன் சோமுவிடம் ரூ.16 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், சோமு கூறியபடி அரசு வேலை வாங்கித் தரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிக்கனுமன் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். பணத்தை திருப்பித் தருவதாகக் கூறி சோமு நீண்ட நாட்களாக இழுத்து அடித்து பணத்தை கொடுக்காமல், பல்வேறு காரணங்களை கூறியுள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த சிக்கனுமன் இது குறித்து, ஊட்டி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக சோமு மற்றும் கோவையை சேர்ந்த குமாரிலதா ஆகிய இரண்டு பேரை கைது செய்து உதகைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதை போல் இந்த குற்றச்சாட்டில் தொடர்புடைய சிவராமன் என்பவரையும் பொருளாதார குற்ற பிரிவினர் தேடி வருகின்றனர். மேலும், இவர் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.