Homeசெய்திகள்க்ரைம்பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: பூந்தமல்லி நீதிமன்ற ஊழியர் மீது 4 பிரிவுகளில் வழக்கு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: பூந்தமல்லி நீதிமன்ற ஊழியர் மீது 4 பிரிவுகளில் வழக்கு!

-

- Advertisement -

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்குச் சென்ற பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த நீதிமன்ற ஆவணக் காப்பக ஊழியர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: பூந்தமல்லி நீதிமன்ற ஊழியர் மீது 4 பிரிவுகளில் வழக்கு!

we-r-hiring

பின்னணி விவரம்:
ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் அலுவல் நிமித்தமாகவும் வழக்குகள் சம்பந்தமாகவும் பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆவணங்கள் பராமரிக்கும் பிரிவு எழுத்தராக (Clerk) பணிபுரிந்து வரும் அருள்தாஸ் (50) என்பவருக்கும், அந்தப் பெண் காவலருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி அருள்தாஸ், பெண் காவலரிடம் தொடர்ச்சியாக ஆபாசமாகப் பேசுவது, செல்போனில் தன்னைத் தொடர்பு கொண்டு தொல்லை தருவது மற்றும் அவர் நடந்து செல்லும் போது பின்தொடர்வது போன்ற பல்வேறு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

எச்சரிக்கைக்குப் பிறகும் தொடர்ந்த அத்துமீறல்:
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவலர், காவல் துறை உயர் அதிகாரிகளிடமும், நீதிமன்ற நீதிபதிகளிடமும் புகார் அளித்தார். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட ஊழியர் அருள்தாசை அழைத்து அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர். இதனால் சில மாதங்களாக அவர் அமைதியாக இருந்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் நீதிமன்றத்திற்குப் பணி நிமித்தமாகச் சென்ற பெண் காவலரிடம், அருள்தாஸ் தனது பழைய சேட்டைகளைக் கைவிடாமல் மீண்டும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவரைத் தொடர்ந்து பின்தொடர்ந்து சென்று அச்சுறுத்தியுள்ளார்.

வழக்குப்பதிவு மற்றும் தேடுதல் வேட்டை:
இதனைத் தொடர்ந்து, மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் நீதிமன்ற ஊழியர் பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அருள்தாஸ் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடைய தன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததை அறிந்த அருள்தாஸ் தலைமறைவாகியுள்ளார். தலைமறைவாகியுள்ள நீதிமன்ற ஊழியர் அருள்தாசை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நீதிமன்றத்திற்குப் பாதுகாப்புப் பணியில் மற்றும் வழக்கு விசாரணைக்காகச் செல்லும் பெண் காவலருக்கே நீதிமன்ற வளாகத்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அருகே வட மாநிலச் சிறுமி மர்ம மரணம்: காதலனின் தொல்லையே காரணமா? – காவல் ஆணையரிடம் தந்தை பரபரப்பு புகார்!

MUST READ