சேலத்தில் மருத்துவ மாணவியை கொலை செய்து விட்டு தலைமறைவான தந்தையை போலீசார் கைது செய்தனர். மகளை கொன்றது ஏன் என அவர் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா், பாரதிநகா் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (51). இவரது மகள் வர்ஷினி (22), சேலம் மாவட்டம் சித்தா் கோவில் அருகே தனியாா் ஹோமியோபதி மருத்துவ கல்லூாியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளாா். இவா் கல்லூாி அருகே நல்லாம்பட்டியில், லட்சுமணன் என்பவாின் அடுக்கு மாடிக் குடியிருப்பின் 3வது மாடியில் அறை எடுத்து தங்கியிருந்தாா். இந்நிலையில் கடந்த மாதம் 6ம் தேதி இரவு வர்ஷினின் அறையின் தாழ்ப்பாள் நீண்ட நேரம் வெளிப்புறமாக போடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினா் கதவை திறந்து பாா்த்த போது ஷர்ஷினி படுத்த நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்ததும் இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதில், அவரது தந்தை வரதராஜனே மகளை கழுத்தை நெரித்துக்கொலை செய்தது தெரியவந்தது. மாணவி வர்ஷினி, திருநெல்வேலி வி.கே.புரத்தை சேர்ந்த திருமணமாகி 2 குழந்தைகளுக்கான தந்தையான தேக்வாண்டோ மாஸ்டர் சக்திவேல் (42) என்பவரை காதலித்துள்ளார். அது மட்டுமல்லாமல், அவருடன் பல இடங்களில் சுற்றி வந்துள்ளார். ஏற்காட்டிற்கு சென்றும் அவருடன் தங்கியுள்ளார். இதனை பிடிக்காத வர்ஷினியின் தந்தை வரதராஜன், பலமுறை எச்சரித்தும் வர்ஷினி கேட்கவில்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த அவர், மகளை கொன்றுவிட்டு தலைமறைவானார். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மகளை கொலை செய்துவிட்டு, அவர் சென்னை வடபழனி கோயிலுக்கு சென்று சாமிகும்பிட்டு விட்டு, மொட்டையடித்து வெளியே வந்தது வரை போலீசார் நெருங்கி சென்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். தொடர்ந்து தனிப்படை போலீசார் நெல்லை, காசி, ராமேஸ்வரத்தில் தேடி வந்தனர்.
இந்நிலையில் வரதராஜன் நேற்று சேலம் நீதிமன்றத்தில் சரணடைய நண்பருடன் வந்துள்ளாா். அப்போது ரகசிய தகவலின்பேரில் அவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்து இரும்பாலை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கண்கலங்கினார். அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில், ‘‘நான் மிகவும் கஷ்டப்பட்டு என் மகளை படிக்க வைத்தேன். ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டு திருமணமானவரை காதலித்து வந்தாா். இது தவறு. வேண்டாம் விட்டுவிடு என்று காலில் விழுந்து கெஞ்சியும், பிடிவாதமாக மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்து ஓங்கி அடித்தேன். கீழே விழுந்தவுடன் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அறையில் இருந்து வெளியே வந்துவிட்டேன்.
அங்கிருந்து சென்னை சென்று, வடபழனி முருகன் கோயிலில் மொட்டையடித்தேன். அங்கிருந்து திருப்பதி சென்று விட்டு பின்னர் திருவண்ணாமலைக்கு வந்தேன். அதன்பிறகு எங்கே போவது என்று தெரியாமல் அலைந்து திாிந்தேன். பின்னா் அங்கேயே சுற்றிவந்தேன். மகளை கொன்ற மனஉளைச்சலில் கோர்ட்டில் சரணடைய முடிவு செய்துவிட்டு சேலம் வந்தேன் என்று கூறினாா். தொடர்ந்து அவரை கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வரதராஜனை கோர்ட்டில் போலீசாா் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


