சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அப்ரூவராக மாறுவதற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அரசு தரப்பு சாட்சியாக மாற முன்வந்த நிலையில், அதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் மீண்டும் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
பிரபல இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில், பிரபல தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து, கடந்த மாதம் டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஜாக்குலின் பெர்னாண்டஸ், இந்த வழக்கில் உண்மைகளை வெளிப்படுத்த தயாராக இருப்பதாகவும், தன்னை அரசு தரப்பு சாட்சியாக ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். மேலும், தாம் ஒரு பாதிக்கப்பட்ட பெண் என்றும், சுகேஷ் சந்திரசேகரின் மோசடி வலையில் தெரியாமல் சிக்கிக் கொண்டதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ஜாக்குலின் அரசு தரப்பு சாட்சியாக மாறினால் வழக்கில் முக்கியமான ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதேசமயம், சுகேஷ் சந்திரசேகரின் பின்னணி மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஜாக்குலினுக்கு அனைத்தும் தெரிந்திருந்தும், அவர் வழங்கிய விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை பெற்றுக் கொண்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
எனவே, ஜாக்குலின் பெர்னாண்டஸை அரசு தரப்பு சாட்சியாக ஏற்க முடியாது என்றும், அது வழக்கின் நிலைப்பாட்டிற்கு முரணானதாக இருக்கும் என்றும் அமலாக்கத்துறை தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளை குறிவைத்து கொள்ளை – 21 பேர் கும்பல் கைது
