சென்னை அருகே வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அவ்வப்போது இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை சீறிப்பாயும் வகையில் அதிவேகமாக இயக்கியும், அதிவேகமாக பயணித்து வாகனத்தின் முன்பக்க சக்கரத்தையும், அதற்கு பிறகு பின்பக்க சக்கரத்தையும் தூக்கியபடி சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவர் வாகனத்தை இயக்கும் போது , மற்றொருவர் பின்பக்கம் வாகனத்தை பிடித்து தொங்கியபடி கால்களை தரையில் தேய்த்தபடியும் சாகசகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சாகசத்தில் ஈடுபடுவதை விடியோவாக பதிவு செய்து ரீலிஸ், ஸ்டேட்டஸ் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபவோரை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் போக்குவரத்து காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

அருமந்தை பகுதியில் இளைஞர் சிலர் பைக் சாகசத்தில் ஈடுபடுவதாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சென்ற போது அங்கு ஆபத்தான முறையில் இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து மூவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் நாரவாரிக்குப்பத்தை சேர்ந்த ரமேஷ்பாபு (19), காவாங்கரை இளைஞர் தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த லெனின் ஜான்சன் (18), வழுதிகைமேடு சேர்ந்த தினேஷ் (21) ஆகிய மூவரை கைது செய்து அவர்கள் சாகசத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் ஓட்டுநர் உரிமத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்கள் சாகசத்தை வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மூவர் மீது பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர். பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
