சென்னை எண்ணூரில் ஓடும் ரயிலில் ஆந்திராவை சேர்ந்த பயணியை தாக்கி செல்போன் பறித்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 9ஆம் தேதி ஆந்திர மாநிலம் விஜயவாடா நோக்கி பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. எண்ணூர் அருகே ரயில் சென்றபோது ரயில் படிக்கட்டில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த மோகன்ராவ் (வயது 38) என்பவரை சிலர் தாக்கி, அவரது செல்போனை பறித்துச்சென்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மோகன்ராவ் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, எண்ணூரை சேர்ந்த பல்வேறு வழிப்பறி குற்றங்களில் தொடர்புடைய ஹரிகரன் (வயது 20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மோகன்ராவிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஹரிஹரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலும், சிறுவனை கெல்லீஸ் அரசு கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.