பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான நிலத்தைத் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில், இடைநீக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையின் போது, பத்திரப்பதிவு செய்ததில் மற்றொரு சார்பதிவாளருக்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.


வழக்கின் பின்னணி என்ன?
பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான 1.4 ஏக்கர் நிலம், கடந்த ஜூலை 6ஆம் தேதி சேதுபதி மற்றும் வெள்ளத்துரை ஆகிய தனிநபர்கள் இருவர் பெயரில் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. கோவில் தரப்பில் ஆவணங்களைச் சரிபார்க்கக் கோரி மனு அளிக்கப்பட்டிருந்த நிலையிலும், பதிவுத்துறை விதி 22A-க்கு முரணாக இந்தத் தவறு நடந்துள்ளது.
இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அந்தப் பத்திரப்பதிவை ரத்து செய்து உயர் நீதிமன்ற இருநீதிபதிகள் அமர்வு ஏற்கனவே தீர்ப்பளித்தது. இந்த முறைகேடு தொடர்பாகச் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் (Sustent) செய்யப்பட்டார். மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த விசாரணை சிபிசிஐடி (CB-CID) போலீசாருக்கு மாற்றப்பட்டது. கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க ஜஸ்டின் மணிகண்டன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
கோவில் தரப்பில் கடுமையான எதிர்ப்பு
இந்த நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் நில கண்காணிப்பாளர் முருகானந்தம் சார்பில் இந்த வழக்கில் ஓர் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவுத்துறையின் புதிய விதிகளைப் பின்பற்றாமல், தூய்மையான கரங்களுடன் நீதிமன்றத்தை அணுகவில்லை. கோவில் தரப்பு எதிர்ப்பையும் மீறி இந்த முறைகேடு நடந்துள்ளதால், அவருக்கு எக்காரணம் கொண்டும் முன் ஜாமீன் வழங்கக் கூடாது; அவரது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.
நீதிமன்றத்தில் அம்பலமான புதிய திருப்பம்!
இந்த வழக்கு நீதிபதி ராஜசேகர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதிரடி ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
“இந்த வழக்கு மிகவும் விசித்திரமானது. சம்பந்தப்பட்ட நிலத்திற்கான பத்திரப்பதிவுப் பணிகளை மனுதாரர் (ஜஸ்டின் மணிகண்டன்) முழுமையாகச் செய்யவில்லை. முன்பிருந்த பதிவாளர் பாலசுந்தர் என்பவர், ஜூலை 3ஆம் தேதியே ஆவண எண் ஒதுக்குவதைத் தவிர மற்ற அனைத்துப் பத்திரப்பதிவு நடவடிக்கைகளையும் முடித்துவிட்டார். அவர் விடுப்பில் சென்றதால், பொறுப்பு அதிகாரியாக வந்த மனுதாரர் இறுதிப் பணிகளை மட்டுமே செய்துள்ளார். மேலும், விதிகளின்படி உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி, இந்த ஆவணத்தில் சந்தேகம் இருந்ததால் ஆவணங்களை மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு மனுதாரர் அனுப்பியுள்ளார். ஆனால், அரசு தரப்பில் திட்டமிட்டு உண்மையாகப் பதிவு செய்தவரைத் தப்பவிட்டு, மனுதாரரைக் குற்றவாளியாக்கியுள்ளனர்” என வாதிட்டார்.
நீதிபதியின் அடுக்கடுக்கான கேள்விகள்
இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி, “ஏற்கனவே ஜூலை 3ஆம் தேதி பத்திரப்பதிவுப் பணிகளை மேற்கொண்ட முந்தைய பதிவாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அவர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், “ஜூலை 3ஆம் தேதி பதிவுக்கான ஆரம்பக்கட்ட வேலைகள் மட்டுமே செய்யப்பட்டன. இந்த மனுதாரர்தான் பதிவுகளை முறைப்படி இறுதி செய்து முடித்துள்ளார். எனவே அவரை மட்டும் சேர்த்துள்ளோம். தேவைப்பட்டால் முந்தைய பதிவாளரையும் விசாரித்து வழக்கில் சேர்ப்போம்” என்றார். அதற்கு நீதிபதி, “பத்திரப்பதிவின் எண் ஒதுக்குவதைத் தவிர பிற முக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் முன்பிருந்த பதிவாளர் பாலசுந்தரால் செய்யப்பட்டுள்ளது எனும்போது, நடவடிக்கைகள் இருபக்கமும் (இரு அதிகாரிகள் மீதும்) எடுக்கப்பட வேண்டும்” என்று சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி ராஜசேகர், “மனுதாரர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பத்திரப்பதிவின் இறுதிக்கட்டப் பணிகளை மட்டுமே முடித்து, மேல் விசாரணைக்காக மாவட்ட ஆட்சியருக்கு ஆவணங்களை அனுப்பியுள்ளார்” என்பதைக் குறிப்பிட்டு ஜஸ்டின் மணிகண்டனுக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மனுதாரர் ஜஸ்டின் மணிகண்டன் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி (சரண்டர் ஆகி) ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அவர் தினந்தோறும் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும்.
முழுமையாகப் பத்திரப்பதிவு செய்யவில்லை என்ற காரணத்தினாலும், முந்தைய அதிகாரியின் தலையீடு இருப்பதாலும் சார்பதிவாளருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதுடன், இவ்வழக்கில் சிபிசிஐடி விசாரணை இனி முந்தைய பதிவாளர் பக்கமும் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
