Homeசெய்திகள்மாவட்டம்நீதிமன்றத்தை ஏமாற்றி பல கோடி மதிப்புள்ள பழனி கோயில் நிலம் பத்திரப்பதிவு; தனி நீதிபதி உத்தரவை...

நீதிமன்றத்தை ஏமாற்றி பல கோடி மதிப்புள்ள பழனி கோயில் நிலம் பத்திரப்பதிவு; தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு!

-

- Advertisement -

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள மடத்தின் நிலத்தைத் தனி நபர்கள் நீதிமன்றத்தை ஏமாற்றி முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், அந்தப் பதிவை முழுமையாக ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், இந்த முறைகேட்டிற்குத் துணையாக இருந்த பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகளின் செயல்பாட்டிற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த பரபரப்பான வழக்கின் முழு விவரம் வருமாறு:

பழனி

we-r-hiring

​பல கோடி மதிப்புள்ள கோயில் நிலம் அபகரிப்பு முயற்சி

​பழனி அடிவாரம், சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 1.35 acres நிலத்தின் சந்தை மதிப்பு பல கோடி ரூபாயாகும். இந்து சமய அறநிலையத்துறையின் 1999-ம் ஆண்டு உத்தரவின்படி, இந்த மடத்தின் சட்டப்பூர்வமான ‘தக்கார்’ (நிர்வாக அதிகாரி) ஆகப் பழனி கோயில் நிர்வாக அதிகாரியே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சேதுபதி மற்றும் கே. வெள்ளத்துரை ஆகிய இருவர், இந்த நிலத்தை ஒரு தனியார் அறக்கட்டளையிடமிருந்து வாங்கியதாகக் கூறி, அந்த கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்ய பழனி சார்பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பத்திரத்தைப் பதிவு செய்ய அனுமதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.

​மேல்முறையீட்டில் அம்பலமான மோசடி!

​தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்துப் பழனி கோயில் தக்காரான நிர்வாக அதிகாரி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், “சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பாக ஏற்கனவே போடப்பட்ட வழக்கு கடந்த 2024-ம் ஆண்டே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது போன்ற ஒரு போலித் தோற்றத்தை உருவாக்கி, நீதிமன்றத்தில் தவறான தகவல்களைத் தந்து மனுதாரர்கள் உத்தரவு பெற்றுள்ளனர். வழக்கில் முக்கிய தரப்பான தக்காரை ஒரு எதிர்மனுதாரராகக் கூட சேர்க்காமல், உண்மைகளை மறைத்து இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளது.

மேலும், இந்த இடத்தை முடக்க வேண்டும் என ஏற்கனவே கோயில் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தும், சார்பதிவாளர் இந்த விபரங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லத் தவறிவிட்டார். எனவே, இந்த முறைகேடான உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

​திட்டமிட்டு அதிகாரி விடுப்பு; பொறுப்பு அதிகாரியின் கைவரிசை!

​இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்: “சம்பந்தப்பட்ட இடம் கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமானது என ஏற்கனவே தீர்ப்புகள் உள்ளன. அவ்வாறு இருக்கையில், உரிய எதிர் தரப்பினரைச் சேர்க்காமல் தனி நீதிபதியிடம் மனுதாரர்கள் மோசடியாக உத்தரவு பெற்றுள்ளனர்.

இது அப்பட்டமாக நீதிமன்றத்தை ஏமாற்றிப் பெறப்பட்ட உத்தரவாகும். இந்த நிலப் பத்திரம் செய்யக்கூடாது எனத் தெரிந்தே, பத்திரப்பதிவுத் துறையில் வழக்கமாக இருக்கும் பதிவாளரைத் திட்டமிட்டு விடுப்பில் அனுப்பிவிட்டு, பொறுப்பில் வந்த தற்காலிக அதிகாரி மூலமாக இந்த முறைகேடான பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.”

​விதிகளை மீறிய அதிகாரி; நீதிமன்றத்தின் சாட்டையடி!

​மதம் மற்றும் ஆன்மீக வழிபாட்டுச் சம்பந்தமான இடங்களைப் பதிவு செய்யும்போது ஏதேனும் சட்டப் பிரச்சினைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி, அனைத்து தரப்பு விசாரணையும் முடித்த பின்புதான் பதிவு செய்ய வேண்டும் என்ற பத்திரப்பதிவுத் துறை விதி உள்ளது. இதனை அதிகாரிகள் முற்றிலும் மீறியுள்ளனர். “ஒரு பத்திரப்பதிவு அதிகாரி எவ்வாறு இது போன்ற விதிகளை மீறி முறைகேடுகளில் ஈடுபட முடியும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அரசுத் தரப்பில், சம்பந்தப்பட்ட அதிகாரி தற்காலிகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், “தற்காலிகப் பணிநீக்கம் என்பது இதற்குப் போதுமான தண்டனை இல்லை” என்று குறிப்பிட்டனர்.

​இறுதித் தீர்ப்பு: பத்திரப்பதிவு ரத்து!

​வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, “இந்த நிலப் பரிமாற்றம் முற்றிலும் முறைகேடாகவும், சட்டம் மற்றும் உண்மைகளுக்குப் புறம்பாகவும், நீதிமன்றத்தை ஏமைற்றியும் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த முறைகேடான பத்திரப்பதிவு செல்லாது என அறிவித்து, அதனை முழுமையாக ரத்து செய்து இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது” எனத் தங்களது அதிரடித் தீர்ப்பை வழங்கினர்.

MUST READ