பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெரும் தீப்பிழம்புடன் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.


தீப்பிடித்து எரியும் 6 ஏக்கர் கிடங்கு:
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை சேமித்து தரம் பிரிக்கும் கிடங்கு பண்ணவயல் சாலையில் உள்ள நைனாங்குளம் பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளாகத்தில், 1 ஏக்கர் பரப்பளவில் குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு இந்த குப்பைக் கிடங்கில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மளமளவென பரவிய தீ:
காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவி, ஒட்டுமொத்த குப்பைக் கிடங்கு முழுவதையும் சூழ்ந்தது. அருகில் எவரும் நெருங்க முடியாத அளவிற்கு பெரும் தீப்பிழம்புகளுடன் குப்பைகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. விபத்து குறித்து உடனடியாக பட்டுக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் தீவிர போராட்டம்:
தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டுக்கோட்டை தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. எனினும் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பேராவூரணி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டு, அங்கிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இரு பகுதி வீரர்களும் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அதிகாரிகள் நேரில் ஆய்வு:
விபத்து குறித்து அறிந்த பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் கனிராஜ், நகர திமுக செயலாளர் செந்தில்குமார், மற்றும் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் மதன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து நிலைமையை பார்வையிட்டனர்.
ஆணையர் விளக்கம்:
இதுகுறித்து நகராட்சி ஆணையர் கனிராஜ் கூறுகையில், “நகராட்சிக்கு சொந்தமான இந்த குப்பைக் கிடங்கில் தீப்பிடிப்பதற்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லாத வகையில்தான் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அப்படியிருந்தும் இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
இச்சம்பவத்தால் பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலைப் பகுதியில் பெரும் பரபரப்பும் புகை மூட்டம் நிலவி வருகிறது
