செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட நிர்வாகியுமான வீராசாமி, லஞ்சப் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.


வைரல் வீடியோவும் பின்னணியும்:
மாம்பாக்கத்தில் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டதற்கான பில் தொகையை முடித்துக் கொடுப்பதற்காக, ஒப்பந்ததாரர் நவீன் என்பவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி தனது அலுவலகத்தில் வைத்து லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விளக்கம் அளித்த வீராசாமி:
இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த வீராசாமி, தான் லஞ்சம் வாங்கவில்லை என்றும், ஒப்பந்ததாரர் நவீனுக்கு ஏற்கனவே தான் கொடுத்திருந்த கடன் தொகையைத்தான் திரும்பப் பெற்றதாகவும் தன் தரப்பு நியாயத்தைக் கூறினார்.
கட்சித் தலைமை அதிரடி நடவடிக்கை:
பணப் பரிமாற்றம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தவெக கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திய நிலையில், கட்சித் தலைமை அவர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.வி.தினகரன் (தீனா) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராகப் பதவி வகித்து வந்த வீரா (எ) வீராசாமி இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி தொடங்கப்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே, லஞ்சப் புகாரில் சிக்கிய மாவட்ட நிர்வாகியைத் தவெக தலைமை உடனடியாக நீக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
