தென்காசி அருகே வேற்று சமூகப் பெண்ணை திருமணம் செய்த இளைஞரை தாக்கி பெண்ணை கடத்திச் சென்றதாக பெற்றோர் உள்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி அருகே கொட்டா குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் என்ற வினித். இவர் சென்னையில் மென் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

வினித் பிரானூர் பார்டரில் வசிக்கும் கிருத்திகா பட்டேல் என்ற பெண்ணை காதலித்து, பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கு கிருத்திகா வீட்டினர் கடும் எதிர்பு தெரிவித்து கணவனிடமிருந்து மகளை பிரித்து செல்ல வேண்டும் என்று திட்டமிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த வினித் கடந்த 14ஆம் தேதி, தனக்கும் தன் குடும்பத்திற்கும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை இருப்பதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு அளித்திருந்தார் .
முதலமைச்சரின் தனிப்பிரிவிலிருந்து அவரது மனு தென்காசி மாவட்ட கண்காணிப்பாளருக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது.
இதை அடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மணமகள் பெற்றோரை பேச்சுவார்த்தைக்கு போலீசார் அழைத்து பேசினார்.
பேச்சு வார்த்தை முடிந்து கிருத்திகாவை அவரது கணவர் வினித் காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது இலஞ்சி என்ற பகுதியில் அவர்களின் காரை வழிமறித்து கிருத்திகாவின் தாய் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் அவர்களை துரத்த ஆரம்பித்தனர் .

பாதுகாப்பு கருதி அவர்கள் குத்துக்கல்வலசை மதுரை ரோட்டில் ஒரு மர ஆலையில் இருவரும் ஓடி ஒளிந்தனர். இருப்பினும் அவரது உறவினர்கள் அனைவரும் உள்ளே சென்று கிருத்திக்காவை வலு கட்டாயமாக தூக்கி காரில் ஏற்றி சென்றுள்ளனர்.
இந்த பதைக்க வைக்கும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது .
இது தொடர்பாக வினித் அளித்த புகாரின் பேரில் குற்றாலம் போலீசார் கிருத்திகாவின் தந்தை நவீன் படேல் மற்றும் தாயார் தர்மித்தா பட்டேல், உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


