மாணவர்களுக்குத் தேர்தல் நடைமுறைகள், வாக்களிப்பின் முக்கியத்துவம் மற்றும் ஜனநாயக மாண்புகள் குறித்து நேரடி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அரசுப் பள்ளியில் தேர்தல் ஆணைய விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட மாணவர் சபைத் தேர்தல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தருமபுரி மாவட்டம், ஊமியம்பட்டியில் உள்ள பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்த அற்புதத் தேர்தல் திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.

265 மாணவர்களுடன் வாக்காளர் பட்டியல்!
இப்பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை மொத்தம் 295 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் 2 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான 265 மாணவர்களை உள்ளடக்கி, முறையான ‘வாக்காளர் பட்டியல்’ தயாரிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட விரும்பிய மாணவர்கள், தங்களது பெற்றோரின் ஒப்புதல் கடிதம் மற்றும் வகுப்பாசிரியர்களின் பரிந்துரை கடிதத்துடன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மொத்தம் ஒன்பது மாணவர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், பரிசீலனைக்குப் பிறகு ஒருவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றொருவர் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். இறுதி வேட்பாளர் பட்டியலின்படி மொத்தம் 7 மாணவர்கள் தேர்தல் களத்தில் இறுதிப் போட்டியாளர்களாக நின்றனர்.

பறவைகள் சின்னத்தில் வாக்குச்சீட்டு முறை
போட்டியிட்ட மாணவர்களுக்குப் பல்வேறு பறவைகளின் சின்னங்கள் தேர்தல் அடையாளமாக ஒதுக்கப்பட்டன. உண்மையான தேர்தலைப் போன்றே, வாக்களிக்க வந்த ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் புகைப்படம் மற்றும் வேட்பாளர்களின் சின்னங்கள் அச்சிடப்பட்ட அதிகாரப்பூர்வ வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் வரிசையில் நின்று, ரகசிய வாக்குப்பதிவு அறையில் தங்களுக்குப் பிடித்த வேட்பாளருக்கு முத்திரையிட்டு தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
தேர்தல் வாக்குறுதிகளுடன் அனல் பறந்த பிரச்சாரம்!
தேர்தலுக்கு முன்பாக வேட்பாளர்கள் பள்ளியில் தீவிரப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். 8-ஆம் வகுப்பு மாணவர் சி. நவநீஷ் உள்ளிட்ட வேட்பாளர்கள் மாணவர்களிடம் பேசுகையில், “பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருப்பது, மரக்கன்றுகள் நடுவது, மதிய உணவைச் சீராக விநியோகிக்க உதவுவது மற்றும் சக மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவது” உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து வாக்குச் சேகரித்தனர்.
இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் கா. நரசிம்மன் கூறுகையில்:
”இந்தத் தேர்தல் விளையாட்டுத் தனமாக நடத்தப்படவில்லை. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அப்படியே பின்பற்றி, மாணவர்களுக்கு ஒரு நேரடி ஜனநாயக அனுபவத்தைக் கொடுக்கும் நோக்கில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் அவர்களைப் பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றும்.”
அரசுப் பள்ளி மாணவர்களிடம் சிறு வயது முதலே பொறுப்புணர்வையும், தேர்தல் குறித்த தெளிவையும் வளர்க்கும் இத்தகைய ஆரோக்கியமான முயற்சிகளைத் தமிழகத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பரவலாக்க வேண்டும் எனப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
