ஈரோட்டில் மக்கள் ஆர்வமோடு வந்து வாக்கு செலுத்துவதால் அதிமுகவிற்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்றும் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு, தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம், கல்லு பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கே எஸ் தென்னரசு தனது வாக்கினை செலுத்தினார். அவருடன் அவர் மனைவி பத்மினி, மகள் வாணி, மருமகள் சுகாசினி ஆகியோரும் வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர்.


கே எஸ் தென்னரசு வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் கூறும் போது, மக்கள் ஆர்வமோடு வந்து வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். இது அதிமுகவிற்கு சாதகமாக அமையும். எனவே 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், வாக்குப்பதிவு சற்று தாமதமாக இருக்கிறது. இதுகுறித்து தேர்தல் அலுவலர்களிடம் கேட்டேன்.
அப்போது 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், வாக்களிக்க வரும் வாக்காளர்கள், தங்கள் சின்னத்தை தேடி கண்டுபிடித்து வாக்கு செலுத்துவதால் , சில மணித்துளிகள் தாமதமாகிறது என்று தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளேன், நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
