மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதம் தாங்கிய கும்பலால் கடத்தப்பட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் பெரும்பான்மை மெய்த்தி சமூகத்தினருக்கும், குக்கி பழங்குடியினருக்கும் இடையே வன்முறை வெடித்து கலவரமாக மாறியது. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் கலவரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலம் அசாம் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி 3 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் என 6 பேரை, ஆயுதம் ஏந்திய கும்பலை கடத்திச்சென்றனர். இதனால் அவர்களை மீட்க வலியுறுத்தித உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து, மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், ஜிரிபாம் மாவட்டத்தில் ஆயுத கும்பலால் கடத்தப்பட்ட 6 பேரும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 3 பேரின் சடலங்கள் ஆற்றில் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மற்ற 3 பேரின் சடலங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அசாம் மாநிலம் சில்சார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனிடையே, மணிப்பூரில் ஆயுத கும்பலால் கடத்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த தவறி மத்திய, மாநில பாஜக அரசுகளை கண்டித்து தலைநகர் இம்பாலில் பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.