கேரளாவில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலி
கேரள மாநிலம் திருச்சூரில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவில்வமலையைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமார் என்பவரின் மகள் ஆதித்யஸ்ரீ, மூன்றாம் வகுப்பு படித்துவந்தார். இவரது தாய், கூட்டுறவு வங்கியின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஆதித்யஸ்ரீ, நேற்று இரவு 10.30 மணியளவில் செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென செல்போன் வெடித்து தீப்பிடித்ததில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்போன் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தைகளிடல் செல்போனை அதிகநேரம் கொடுக்க வேண்டாம் என பலரும் அறிவுறுத்திவருகின்றனர்.