மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விமான கட்டணத்தை அதிகரித்துள்ளதாக ஏர் இந்தயா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் விமான எரிபொருள் (ATF) விலை உயர்வை முன்னிட்டு, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானக் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு 2026 ஏப்ரல் 8ம் தேதி காலை 9:01 மணி முதல் அமலுக்கு வருகிறது.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக விமான சேவைகளின் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அதனை சமன்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளது என்பதும் இதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

புதிய அறிவிப்பின்படி, உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு தூரத்தின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 500 கிலோமீட்டர் வரை பயணங்களுக்கு ரூ.299, 501 முதல் 1,000 கி.மீ வரை ரூ.399, 1,001 முதல் 1,500 கி.மீ வரை ரூ.549, 1,501 முதல் 2,000 கி.மீ வரை ரூ.749 மற்றும் 2,000 கி.மீக்கு மேற்பட்ட பயணங்களுக்கு ரூ.899 வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது.
அதேபோல், சர்வதேச விமானப் பயணங்களிலும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நீண்ட தூர வழித்தடங்களில், ஒரு பிரிவிற்கு (per sector) 280 அமெரிக்க டாலர் வரை, அதாவது சுமார் ரூ.26,000 வரை கூடுதல் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய தூர சர்வதேச வழித்தடங்களிலும் கட்டண உயர்வு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஏர் இந்தியா நிறுவனம் நிலையான கட்டண முறையிலிருந்து விலகி, தூரத்தின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாற்றம், பயணிகளின் பயண தூரத்திற்கேற்ப கட்டணத்தை மாற்றும் வகையில் அமையும் என கூறப்படுகிறது.
மொத்தத்தில், உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் சர்வதேச அரசியல் பதற்றங்கள் ஆகியவற்றின் தாக்கம், விமானப் பயணச் செலவுகளை நேரடியாகப் பாதித்துள்ள நிலையில், அதன் விளைவாக பயணிகள் கூடுதல் கட்டணச் சுமையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
வணிக சிலிண்டரின் விலை ரூ- 10,000 நெருங்குகிறது – இதுவும் பாஜக ஆட்சியின் சாதனை தான்
