அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகராக போர்ட்
பிளேயர் உள்ளது. இந்நிலையில், தலைநகர் போர்ட் பிளேயரின் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என்று மாற்றம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள் எக்ஸ் வலைதள பதிவில், காலனி ஆதிக்க முத்திரைகளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமர்
மோடியின் தொலைநோக்கு பார்வையால் உத்வேகம் பெற்று போர்ட் பிளேயர் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முந்தைய பெயர் காலனித்துவ மரபை கொண்டிருந்தாலும் ஸ்ரீவிஜயபுரம் நமது சுதந்திர போராட்டத்தில் அடைந்த வெற்றியையும், அதில் அந்தமான் நிகோபார் தீவின் தனித்துவமான பங்கையும் குறிப்பதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்டத்திலும், வரலாற்றிலும் அந்தமான் நிகோபார் தீவிற்கு ஈடுஇணையற்ற இடமுள்ளதாக கூறியுள்ள அமித்ஷா, சோழ பேரரசின் கடற்படை தளமாக செயல்பட்ட அந்தமான் நிகோபார் தீவுகள், தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய தளமாகவும் திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.