ஆரவல்லி மலையை காக்கக் கோரி ஹரியானா,ராஜஸ்தானில் போராட்டங்கள் வெடித்துள்ளதை தொடர்ந்து புதிய சுரங்க குத்தகைகளுக்கான அனுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.
வட இந்தியாவின் “நுரையீரல்” என அழைக்கப்படும் ஆரவல்லி மலைத்தொடர், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை இணைத்து சுமார் 650 கிலோமீட்டர் நீளமாக பரவியுள்ளது. பல்லுயிர்ப் பெருக்கத்தைக் காக்கும் இந்த மலைத்தொடர், தார் பாலைவனம் மேலும் விரிவடையாமல் தடுக்கும் இயற்கை அரணாகவும் செயல்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆரவல்லி மலைத்தொடரை பாதுகாப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஆரவல்லி மலைகளைப் பற்றிய புதிய வரையறையை ஒன்றிய அரசு வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புதிய வரையறையின் படி, தரைமட்டத்திலிருந்து 100 மீட்டர் அல்லது அதற்கு மேல் உயரம் இருந்தால் மட்டுமே அது “மலை” எனக் கருதப்படும். 500 மீட்டர் சுற்றளவிற்குள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட குன்றுகள் இருந்தால் மட்டுமே அது “மலைத் தொடர்” என வகைப்படுத்தப்படும்.
ஒன்றிய அரசுன் ”புதிய வரையறையால் ஏராளமான குன்றுகள், மலை என்ற தகுதியை இழக்கும்” அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த புதிய வரையறையை புதிய வரையறை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால் சர்ச்கை வெடித்தது. ஆரவல்லி மலையை காக்கக் கோரி ஹரியானா,ராஜஸ்தானில் போராட்டங்கள் வெடித்துள்ளது.
போராட்டங்களின் எதிரொலியாக, ஆரவல்லி மலைத்தொடரில் செயல்படும் சுரங்கங்களை கண்காணிக்க விரிவான சுரங்க மேலாண்மைத் திட்டம் தயாரிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் ஒரு பகுதியாக, புதிய சுரங்க குத்தகைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
சர்ச்சை வெடித்த பிறகு, போராட்டங்களுக்கு அடிபணிந்துள்ள ஒன்றிய அரசு, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முன்வந்துள்ளது. அதன் விளைவாக, ஆரவல்லி மலைத் தொடரில் புதிய சுரங்க குத்தகைகளுக்கான அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,மலைத் தொடரை சட்டவிரோத சுரங்கங்களில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


