அமித்ஷா மீது காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார்
காங்கிரஸ் வென்றால் கலவரம் நடக்கும் என கர்நாடக தேர்தல் பரப்புரையில் அமித்ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என கடந்த மார்ச் 29 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் கட்சிகள் மாநிலம் முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றால் கலவரம் நடக்கும் என தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். இது வன்முறையை தூண்டுவதாக கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர்கள் டிகே.சிவக்குமார், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பாஜகவினர் எதிர்க்கட்சிகளை இழிவுபடுத்துவதாக காங்கிரஸ் தலைவர் குற்றஞ்சாட்டுகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் கலவரம் ஏற்படும் என மாநில வாக்காளர்களை மிரட்டியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.சிவக்குமார், ரந்தீப் சுர்ஜீவாலா, “சாதி, மத மோதலை தூண்டும் விதமாக பேசி கர்நாடகாவின் அமைதியை அமித்ஷா குலைக்கிறார்” எனக் குற்றஞ்சாட்டினர்.