
நான் ஓய்வு பெற்ற பிறகே வழக்கின் விசாரணை நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறதா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வழக்கை வேறு தினத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கையை வைத்தார். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதியும் வழக்கை இன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்திருந்த நிலையில் இன்று வழக்கின் விசாரணை மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது.


அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கையை வைத்தார். அதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் (நவம்பர் 24ம் தேதி) தலைமை நீதிபதி பதவியில் இருந்து தான் ஓய்வு பெறவுள்ள நிலையில், அதன் பிறகே இது போன்ற வழக்குகளை விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறதா? என்றும் அப்படி என்றால் வெளிப்படையாக கூறி விடுங்கள் என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் வழக்கின் விசாரணையை தொடர்ந்து ஒத்திவைக்க கூறினால் எவ்வாறு வழக்கின் விசாரணையை முடித்து தான் தீர்ப்பு எழுதுவது? இது மிகவும் துரதிஷ்டவசமானது என்றும் வருத்தம் தெரிவித்தார்.


