தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில், கடத்திவரப்பட்ட சஹாரா பாலைவன அபூர்வ வகை நரிகள் இரண்டு சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். விலங்கியல் துறையின் முறையான அனுமதி இன்றி இந்தியாவில் நோய்க் கிருமிகளை பரப்பும் விதத்தில் நரி குட்டிகளைக் கொண்டு வந்த சென்னை பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, நரிகளை இந்தியாவுக்குள் அனுமதிக்காமல், மீண்டும் தாய்லாந்துக்கு திருப்பி அனுப்பினர்.

அதிர்ஷ்டத்தை விரும்பும் கோடீஸ்வரர்களுக்காக இந்த நரியை கடத்தி வந்ததாக கடத்தல் பயணி தகவல் தெரிவித்தார். தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், டிசம்பர் 07 ஆம் தேதி நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. சுங்க அதிகாரிகள் சென்னை விமான நிலையம் வந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி பெரிய பிளாஸ்டிக் கூடை ஒன்றை எடுத்து வந்தார்.

சுங்க அதிகாரிகளுக்கு அதன் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே பயணியை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதை அடுத்து அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடையை திறந்து பார்த்து சோதனையிட்டனர்.

அந்தக் கூடைக்குள் அபூர்வ வகை நரி குட்டிகள் இரண்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த நரி குட்டிகள் வட ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள, பெனின்சுலா பகுதிகளிலும், மேற்கு சஹாரா பாலைவனப் பகுதிகளிலும் வசிப்பவை. இவை மிகவும் அபூர்வமானவை. இதை ஃபென்னஷ் ஃபாக்ஸ் என்ற பாலைவன நரி என்று கூறுவார்கள். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்த பாலைவன நரி குட்டிகளை பறிமுதல் செய்தனர். அதோடு அதை கடத்தி வந்த பயணியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது இந்த நரியை காலையில் எழுந்ததும் பார்த்தால், அன்று நாள் முழுவதும் மிகுந்த அதிர்ஷ்டமாக இருக்கும். நினைத்த செயல்கள் அனைத்தும், வெற்றிகரமாக நடக்கும். எனவே இதை மிகப் பெரிய செல்வந்தர்கள் பல லட்சம் பணம் கொடுத்து வாங்குவார்கள். எனவே இதை நான் பாலைவனப் பகுதியில் இருந்து மிகக் குறைந்த விலையில் வாங்கி வந்திருக்கிறேன், என்று கூறினார். இதை யார் வாங்க இருக்கிறார்கள்? என்று கேட்டபோது அதற்கான பதிலை அவர் சரிவர கூறவில்லை.
இதற்கிடையே இதைப்போன்ற வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் விலங்குகள், மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அதற்கு நோய்க்கிருமிகள் எதுவும் இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் இருக்க வேண்டும். அதோடு சர்வதேச விலங்கியல் துறையின் அனுமதியுடன் தான் கொண்டு வர வேண்டும். மேலும் நமது நாட்டின் விலங்குகள் துறையிடம் அனுமதி பெற வேண்டும். இதுபோன்ற எந்தவிதமான சான்றும் அந்த பயணியிடம் இல்லை.

இதை அடுத்து உடனடியாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வன குற்ற பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்துவிட்டு, இதை இந்தியாவுக்குள் அனுமதிக்கவே முடியாது. இந்த நரி குட்டிகளை நமது நாட்டிற்குள் அனுமதித்தால், பல்வேறு நோய்க்கிருமிகள் பரவிவிடும். எனவே இதை உடனடியாக எந்த நாட்டில் இருந்து, எந்த விமானத்தில் வந்ததோ, அதே விமானத்தில் அதே நாட்டிற்கே திருப்பி அனுப்புங்கள் என்று கூறினார்.

இதை அடுத்து சுங்க அதிகாரிகள் டிசம்பர் 8 ஆம் தேதி நள்ளிரவு சென்னையில் இருந்து தாய்லாந்து செல்ல இருக்கும் தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் இதை தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்புகின்றனர். அதற்கான செலவை, இந்த அபூர்வமான பாலைவன நரி குட்டிகளை, கடத்தி வந்த பயணியிடம் வசூலிக்கின்றனர். அதோடு முறையான அனுமதியின்றி இந்தியாவில் நோய்க்கிருமிகளை பரப்பும் விதத்தில் வெளிநாட்டு விலங்குகளை கொண்டு வந்ததற்காக,அந்த பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து, மேலும் விசாரணை நடத்துகின்றனர்.
அதிஷ்டத்தை நம்பி நரி குட்டிகளை கொண்டு வந்த அந்த பயணிக்கு அதிஷ்டம் கை கொடுக்கவில்லை. கூடவே வந்த நரி குட்டிகள் அவரை சிறையில் தள்ளியது தான் மிச்சம்.