கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் கோவில் வாண வேடிக்கை நிகழ்ச்சியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 150 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் வீரராகவர் கோவில் திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. இதனை ஒட்டி நேற்று நள்ளிரவு கோவில் அருகே பிரம்மாண்ட வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கும் தீ பரவியது. இதனால் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் 150 பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு நீலேஸ்வரம், பிரியாரம் மற்றும் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பட்டாசு விபத்து நடைபெற்ற இடத்தை மாவட்ட ஆட்சியர் இன்பசேகர் நேரில் பாவையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே, கோயிலில் இருந்து குறைந்தபட்சம் 100 மீட்டர் தொலைவில் வாண வேடிக்கை நடத்த வேண்டிய நிலையில், கோயிலின் அருகாமையிலேயே நடைபெற்றது தெரியவந்துள்ளது.