மூன்று புதிய சட்டங்கள் குறித்த விவாதத்திற்காக நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்தங்களின் ‘சாதக பாதகங்கள்’ (merits) குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் மக்களவையில் அமளி நிலவியது.
சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா 2026 ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். அதே நேரத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2026-ஐ அறிமுகப்படுத்த முன்மொழிந்தார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. வேணுபால், இந்த மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காக நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்பை மாற்றியமைக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டினார்.

மக்களவை சபாநாயகர் இதில் தலையிட்டு, விதி 72-ன் கீழ் தங்கள் வாதங்களை முன் வைக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், முழுமையான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க போதுமான நேரம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
வேணுகோபாலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த அமித் ஷா, “இது மசோதாக்களை அறிமுகப்படுத்துவது குறித்த தொழில்நுட்ப ரீதியான ஆட்சேபனைகளை எழுப்புவதற்கான நேரம், ஆனால் வேணுகோபால் மசோதாவின் தகுதிகள் குறித்து கேள்வி எழுப்புகிறார்” என்று கூறினார்.
சமாஜ்வாடி கட்சி, இந்த மசோதாக்கள் கூட்டாட்சி கட்டமைப்பை அழித்துவிடும் என்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை முடக்கிவிடும் என்றும் கூறி அரசியலமைப்பு அடிப்படையில் கடுமையாக எதிர்த்தது. சமாஜ்வாடி கட்சி எம்.பி. தர்மேந்திர யாதவ், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மற்றும் மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என்றும், 2023-ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கோரினார்.
இருப்பினும், தர்மேந்திர யாதவின் விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முஸ்லீம் பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கைக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முஸ்லீம் பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு கோருவது தேவையற்றது என்றும், விவாதத்தில் மதச்சாயம் பூசுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டார்.
ஏஐஎம்ஐஎம் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஓவைசியும் இந்த மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது கூட்டாட்சித் தத்துவம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே எதிரானது என்று குறிப்பிட்டார்.
மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் தொடர்பாக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. 2029 மக்களவைத் தேர்தலிலிருந்து பெண்களுக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முயலும் வேளையில், எதிர்க்கட்சிகள் இதனை மகளிர் இடஒதுக்கீட்டை ஒரு ‘முகமூடியாக’ பயன்படுத்தி, பின்வாசல் வழியாக தொகுதி மறுவரையறையை நிறைவேற்றும் முயற்சி என்று குற்றம் சாட்டுகின்றன.
தொகுதி வரையறை மசோதா மக்களவையில் அறிமுகம் – 251 பேர் ஆதரவு, 185 பேர் எதிர்ப்பு
