ஆம்புலன்சில் எரித்து கொல்லப்பட்ட தாய், மகன்
மணிப்பூரில் காயமடைந்த சிறுவனுடன் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த தாய் ஆம்புலன்ஸ் உடன் தீவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குகி, மெய்ட்டி சமூகத்தினரிடையே தொடர்ந்து வரும் மோதல்கள் காரணமாக, மணிப்பூரில் வெடித்த வன்முறையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 40 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக, மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். ராணுவம், அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவப் பிரிவு மற்றும் மணிப்பூர் காவல்துறையினர் வன்முறையைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்கியுள்ளனர். பல பகுதிகளில் வீடுகள் தீக்கரையாக்கப்பட்டுள்ளதால், மக்கள் செய்வதறியாது தவித்துவருகின்றனர்.
இந்த சூழலில் மணிப்பூரில் காயமடைந்த சிறுவனுடன் இம்பாலில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் சென்றுகொண்டிருந்த தாய் மற்றும் உறவினர்களை ஆம்புலன்சுடன் எரித்துக்கொன்ற கிளச்சியாளர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 10 காவலர்களின் பாதுகாப்பில் ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. ஐரோசெம்பா பகுதியில் ஆம்புலன்ஸை வழிமறித்த நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள், போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், செவிலியரை விரட்டிவிட்டு, ஆம்புலன்ஸ்க்கு தீவைத்தனர். இதில் ஆம்புலன்ஸில் இருந்த டோன்சிங் ஹாங்சிங் (7), அவரது தாயார் மீனா ஹாங்சிங் (45), மற்றும் அவர்களது உறவினரான லிடியா லூரெம்பாம் (37) ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர்.