27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலக அழகிப் போட்டி
இந்தியாவில் 27 ஆண்டுகளுக்கு பிறகு உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 1996 ஆம் ஆண்டு பெங்களூருவில் உலக அழகிப் போட்டி நடைபெற்றது.

நேற்று டெல்லி ஓபராய் ஹோட்டலில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மிஸ் வேர்ல்ட் அமைப்பின் தலைவர், “இந்தியாவில் 27 ஆண்டுகளுக்கு பிறகு உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 140 நாடுகளின் பிரதிநிதிகள் 30 நாட்களுக்கு இந்தியாவில் இருப்பார்கள்.71வது மிஸ் வேர்ல்ட் 2023க்கான தேதி மற்றும் இடம் வரும் மாதங்களில் அறிவிக்கப்படும். 70வது உலக அழகி போட்டி 2022-இல் போர்ட்டோ ரிக்கோவின் ஜோஸ் மிகுவல் அக்ரெலோட் கொலிசியத்தில் நடைபெற்றது” எனக் கூறினார்.


உலக அழகிப் போட்டியில் அருபா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பார்படாஸ், பெலாரஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், குரோஷியா, டென்மார்க், எத்தியோப்பியா, ஜார்ஜியா, கிரீஸ், குவாத்தமாலா, கயானா, இந்தியா, கஜகஸ்தான், லாவோஸ், லெபனான், லெசோதோ, லைபீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள். மாண்டினீக்ரோ, மொராக்கோ, மியான்மர், நியூசிலாந்து, ருமேனியா, சியரா லியோன், தெற்கு சூடான், சுரினாம், தாய்லாந்து மற்றும் ஜாம்பியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அழகிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.


