இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி தென்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எம் பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து உள்ளது. குரங்கு அம்மை நோயை பரவலை தடுக்க நாடு முழுவதற்கும் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ள நிலையில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி தென்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி உள்ளதாகவும், எம்-பாக்ஸ் அறிகுறி உள்ளவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் குரங்கம்மை அறிகுறி உள்ள பயணின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பபட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, தேசிய தொற்றுநோய் தடுப்பு மையம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.,