கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியான நிலையில்- பலியானர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி குத்துமலை முண்டக்கை சூரல் மலை ஆகிய பகுதிகளில் அதிகாலை 2 மணியளவில் மிகப்பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சூரல் மலை பகுதியில் பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் சுமார் 500 குடும்பங்கள் அங்கு சிக்கி அதில் 1000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிக்காக தற்போது கேரள மாநிலத்தின் உடைய தீயணைப்பு துறையினர் பலர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதே போல தேசிய பேரிடர் மீட்பு படையும் அங்கு விரைந்து சென்று கொண்டிருக்கிறார்கள். மேலும் ராணுவத்தின் உதவியும் அங்கு நாடப்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக சூலூரில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் உதவியும் கோரப்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலச்சரிவில் தற்போது வரை 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பெரும் கவலையளிக்கிறது: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், நிலச்சரிவில் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.