உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிலவிவரும் கடும் குளிருக்கு ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.


உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நொய்டா, காசியாபாத், அயோத்தி, கான்பூர், லக்னோ,பரேலி மற்றும் மொராதாபாத்தில் கடுங்குளிர் நிலவிவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளிலும், கிழக்குப் பகுதியில் சில இடங்களிலும் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுகிறது.
இந்நிலையில் கடும் குளிரால் கான்பூரில் 5 ஆம் தேதி மாரடைப்பு மற்றும் மூளைச்சாவு காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர். குளிரில் இரத்த அழுத்தம் திடீரென அதிகரித்து, இரத்த உறைவு காரணமாக மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்பு ஏற்படுவதால் மரணம் நிகழ்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இறந்த 25 பேரில், 17 பேர் மருத்துவ உதவி வழங்குவதற்கு முன்பே உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 723 இதய நோயாளிகள் அவசர மற்றும் கார்டியாலஜி பிரிவை நாடியுள்ளனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 இதய நோயாளிகள் குளிர் காரணமாக உயிரிழந்தனர். பதினைந்து நோயாளிகள் இறந்த நிலையில் அவசர சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஜனவரி 7 வரை உத்தரப் பிரதேசத்தில் கடுமையான பனிமூட்டத்துடன் கூடிய குளிர் அலை முதல் கடுமையான குளிர் நாள் வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
