ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க மாநில அரசு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் வினய் தினு டெண்டுல்கர் என்பவர், செயலி வழியான விளையாட்டுகளை தடை செய்ய மத்திய அரசிடம் திட்டம் உள்ளதா? இக்கால இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தில் பெரும்பாலானோரை ஈர்க்கும் வகையில் செயலி வழியான விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடுவது வரைமுறை செய்யப்பட்டுள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர்,

பந்தயம் மற்றும் சூதாட்டம் உள்ளிட்டவை இந்திய அரசியலமைப்பின் 7வது பிரிவின் 2வது அட்டவணையின் கீழ் மாநில வரம்புக்குள் வரும் அங்கமாகும். அதன்படி, ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க மாநில அரசுகளே சட்டம் இயற்றி கொள்ளும் அதிகாரம் உள்ளது. மேலும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்ட நெறிமுறைகள் படி 2022 ஜூன் 13ம் தேதி முதல் 2022 அக்டோபர் 3ம் தேதி வரை செய்தி நிறுவனங்கள் டிஜிட்டல் இணையதளங்கள் மற்றும் OTT-களில் பந்தயம் மற்றும் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிடகூடாது என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.