spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஉத்தரகண்டில் மேக வெடிப்பு; ஐந்து பேர் பலி, பல குடும்பங்கள் மாயம்…

உத்தரகண்டில் மேக வெடிப்பு; ஐந்து பேர் பலி, பல குடும்பங்கள் மாயம்…

-

- Advertisement -

உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில்  மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இந்த இயற்கை சீற்றத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்றும் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.உத்தரகண்டில் மேக வெடிப்பு; ஐந்து பேர் பலி, பல குடும்பங்கள் மாயம்…வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட இந்த இயற்கை சீற்றத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சுமார் 30-40 குடும்பங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும், பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

​சாமோலி, ருத்ரபிரயாகை, டெஹ்ரி, மற்றும் பகேஷ்வர் ஆகிய மாவட்டங்கள் இந்த இயற்கை சீற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ​உத்தரகண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (USDMA) அளித்த தகவலின்படி, பகேஷ்வர் மாவட்டத்தின் காப்கோட் பகுதியில் உள்ள பௌசாரி கிராம பஞ்சாயத்தில் பெய்த கனமழையால், சுமார் 6 வீடுகளுக்கு மேல் சேதமடைந்துள்ளதாகவும், இதில் இரண்டு பேர் உயிரிழந்த தாகவும் மேலும் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

we-r-hiring

​இதுவரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்ற மூவரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். ​சாமோலி மாவட்டத்தின் மோபாட்டா கிராமத்தில் நிலச்சரிவில் ஒரு வீடும், ஒரு மாட்டுக்கொட்டகையும் புதையுண்டதில் ஒரு தம்பதியினர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் தலைமை மேம்பாட்டு அதிகாரி அபிஷேக் திரிபாதி தெரிவித்துள்ளாா்.

​ருத்ரபிரயாகை மாவட்டத்தில் உள்ள பாசுக்கேதார் பகுதியில் ஏற்பட்ட தொடர் மழை மற்றும் நிலச்சரிவுகளால், 6 கிராமங்களுக்கு மேல் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ​ருத்ரபிரயாகை மாவட்டத்தில் உள்ள தல்ஜாமான் கிராமத்தில் 30-40 குடும்பங்கள் இடிபாடுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாக USDMA தெரிவித்துள்ளது.

​பேரிடர் மேலாண்மைச் செயலர் வினோத் குமார் சுமன் கூறுகையில், ருத்ரபிரயாகை மாவட்டத்தில் உள்ள ஜகோலி என்ற இடத்தில் வீடு இடிந்து ஒரு பெண் உயிரிழந்ததாகக் கூறினார். மேலும், ​ருத்ரபிரயாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் பிரஹ்லாத் கோண்டே, சேனாகட் பகுதியில் நான்கு உள்ளூர்வாசிகள் மற்றும் நான்கு நேபாளிகள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும், 7-8 இடங்களில் சாலைகள் சேதமடைந்ததால் மீட்பு குழுவினர் அந்த இடத்தை அடைவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

​அதே பகுதியில் உள்ள சியூர் கிராமத்தில் ஒரு வீடு சேதமடைந்துள்ளதுடன், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றும் இடிபாடுகளால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பதேத், பாகதார், மற்றும் தல்ஜாமனி கிராமங்களின் இருபுறமும் உள்ள பள்ளத்தாக்குகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என தெரிவித்துள்ளாா்.

​முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில், “ருத்ரபிரயாகை மாவட்டத்தின் பாசுக்கேதார் பகுதியிலும், சாமோலி மாவட்டத்தின் தேவல் பகுதியிலும் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக சில குடும்பங்கள் இடிபாடுகளில் சிக்கியதாக சோகமான செய்தி கிடைத்துள்ளது”

​”உள்ளூர் நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக நான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். நான் பேரிடர் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களிடம் பேசி, மீட்பு நடவடிக்கைகளை திறம்பட நடத்துவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பாபா கேதாரிடம் வேண்டுகிறேன்,” என்று பதிவிட்டுள்ள அவர்,

​தாமி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசி, நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளாா்.

​மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), மாவட்ட பேரிடர் மீட்புப் படை (DDRF) மற்றும் வருவாய் காவல்துறை குழுக்கள் பேரிடர் பாதித்த மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.

​டெஹ்ரி மாவட்டத்தில் உள்ள புத்தா கேதார் பகுதியிலும் தொடர் மழை மற்றும் மேகவெடிப்பு காரணமாக கால்நடைகளுக்கான கொட்டகைகளும், கோயில்களும் இடிபாடுகளுக்குள் புதையுண்டு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஜென்வாலி கிராமத்தில் உள்ள ஒரு கழிப்பறை மற்றும் வீட்டின் முற்றமும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

​கடந்த ஆண்டு பேரிடருக்குப் பிறகு நீர்ப்பாசனத் துறையால் கட்டப்பட்ட பாதுகாப்புச் சுவரும் கனமழையால் அடித்துச் செல்லப்பட்டது. தொடர் மழையால் பால்கங்கா, தர்மகங்கா, மற்றும் பில்கங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

​உருளைக்கிழங்கு வயல்களும் இடிபாடுகளுக்குள் புதையுண்டுள்ளன என்று ஜென்வாலி கிராமத்தின் முன்னாள் தலைவர் கீர்த்தி சிங் ராணா தெரிவித்தார். எனினும், இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

​தொடர் மழை காரணமாக அலக்நந்தா மற்றும் அதன் கிளை நதிகளான மந்தாகினி நதியிலும் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், ஆற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு காவல்துறை அறிவிப்புகளை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்து வருகிறது.

​சாமோலி-நந்தபிரயாகை, கமேடா, பானெர்பானி, பாகல்னாலா, ஜிலசூ, குலாப்கோட்டி, மற்றும் சாத்வபிப்பல் ஆகிய பல இடங்களில் இடிபாடுகளால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை தடைப்பட்டுள்ளது.

​ருத்ரபிரயாகை மாவட்டத்திலும், பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை சிரோப்காட்டில் மூடப்பட்டுள்ளது. அதேபோல, கேதார்நாத் நெடுஞ்சாலை பன்ஸ்வராவிற்கும் (சியால்சௌர்) குந்த் மற்றும் சோப்டாவிற்கும் இடையே நான்கு வெவ்வேறு இடங்களில் தடுக்கப்பட்டுள்ளது. ​இந்த பாதையை திறக்க குழுக்கள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

​யாத்ரீகர்கள் சாலை நிலவரம் குறித்த தகவல்களைப் பெற்ற பின்னரே பயணத்தைத் தொடங்க வேண்டும் என்றும், காவல்துறை மற்றும் நிர்வாகத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் புதுப்பிப்புகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

​வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்திற்கு பகேஷ்வர், சாமோலி, டேராடூன், மற்றும் ருத்ரபிரயாகை மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது. ​அதே காலகட்டத்தில், சம்பாவத், ஹரித்வார், பித்தோராகர், உதம் சிங் நகர், மற்றும் உத்தரகாசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ​பருவமழை காலத்தில் உத்தரகண்ட் மாநிலம் இயற்கை சீற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

​ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஏற்பட்ட கேர் கங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தாராளியின் கிட்டத்தட்ட பாதியை அழித்தது. இது கங்கோத்ரிக்கு செல்லும் முக்கிய பாதையில் உள்ள ஒரு நிறுத்தமாகும், அங்கு பல ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் இருந்தன. அருகிலுள்ள ஹர்சில் என்ற இடத்திலும், ராணுவ முகாம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பிற்காக ஓடிச் செல்ல கூட அவகாசம் கிடைக்கவில்லை.

​அந்த நிகழ்வில், ஒன்பது ராணுவ வீரர்கள், 25 நேபாளிகள், பீகாரைச் சேர்ந்த 13 பேர், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஆறு பேர், தாராளியைச் சேர்ந்த எட்டு பேர், உத்தரகாசிக்கு அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஐந்து பேர், டெஹ்ரியைச் சேர்ந்த இரண்டு பேர் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உட்பட மொத்தம் 69 பேர் காணாமல் போயினர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜி.கே.மூப்பனார் 24வது நினைவு நாள்… என்.டி.ஏ. தலைவர்கள் மரியாதை…

MUST READ