தெலங்கானாவில் தினந்தோறும் மது குடித்துவிட்டு வந்ததால் பேய் பிடித்தது போல் நடித்து கணவனை அடித்து எலும்புகள் உடைத்த மனைவியால் பரபரப்பு.
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் பெனுபள்ளி மண்டலம், வி.எம். பஞ்சார் கிராமத்தை சேர்ந்த கங்காராம் (51) லட்சுமி தம்பதியினருக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகின்றனர். கங்காராம் மதுவுக்கு அடிமையாகி வருவதால், கணவன் மனைவி இடையே சில காலமாக சண்டை நடந்து வருகிறது. இந்த சூழலில் இரண்டு நாட்களுக்கு முன்பு பேய் பிடித்ததாகக் கூறி லட்சுமி, திடீரென தனது கணவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரைத் தாக்கினார். கணவர் கங்காராமின் வாயில் துணியை வைத்து அடித்தார். வலியால் துடித்த கங்காராம் கத்தினாலும் சிரித்து கொண்டே தலை முடியை விரித்து கொண்டு மகன்கள் கண்முன்னே கட்டையால் தாக்கினார்.

மனைவியின் தாக்குதலில் பலத்த காயமடைந்த கங்காராம், அலறி அடித்து வெளியே ஓடினார். மனைவியால் காயமடைந்த கங்காராமை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். ஏன் அவரைத் தாக்கினீர்கள் என்று உறவினர்கள் லட்சுமியிடம் கேட்டபோது, அவர் விசித்திரமாக நடந்து கொண்டார், தனக்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறினார். தாக்குதலுக்குப் பிறகு, கங்காராம் தனது மனைவி வேண்டுமென்றே தன்னைத் தாக்கியதாகக் கூறினார். மேலும் கங்காராம் தனது மனைவி லட்சுமி மீது வி.எம். பஞ்சார் போலீசில் புகார் அளித்தார்.
பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில், போலீசார் லட்சுமி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். கங்காராமுக்கு விலா எலும்புகள் உடைந்து பலத்த காயங்கள் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கம்மம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கங்காராம் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.