பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் வினித் கோயலை நீக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்
கொல்கத்தா ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த வதுக்கில் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், காவல்துறை அதிகாரி அபிஜித் மொண்டல் ஆகியோரை சிபிஐ கைது செய்தனர்.
இதனிடையே, பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் நீதி வேண்டியும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரியும் கொல்கத்தா நகரில் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது செய்தியாளர்களிடம் பேசிய இளநிலை மருத்துவர்கள் அமைப்பு மற்றும் பயிற்சி மருத்துவரகளின் கூட்டமை ப்பு, கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயல், சுகாதார மற்றும் குடும்பநல துறையில் உள்ள அனைத்து மூத்த அதிகாரிகளையும் நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் மருத்துவர்கள் கோரிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, போராடி வரும் மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று, கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயலை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகவும், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய ஒப்பு கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இன்று மாலை 4 மணியளவில் புதிய காவல் ஆணையரிடம் தன்னுடைய பொறுப்புகளை அவர் ஒப்படைப்பார், சுகாதார துறையில் 3 பேரை நீக்க கோரியுள்ள நிலையில், அதில் 2 பேரை நீக்க அரசு ஒப்புக் கொண்டிருப்பதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மருத்துவர்களின் 4 கோரிக்கைகளில் 3 கோரிக்கை களை நிறைவேற்றி விட்டதாகவும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுகொண்டார். இதனிடையே, பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது