கொண்டைக்கடலையை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதனால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது கொண்டைக்கடலையில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், கூந்தலின் ஆரோக்கியத்திற்கும், எடை இழப்பிற்கும் பெரிதும் பயன்படுகின்றன. அதிலும் குறிப்பாக கருப்பு கொண்டைக்கடலை உடலுக்கு மிகவும் நல்லது. வெள்ளை கொண்டைக்கடலையை சாப்பிட்டாலும் நன்மைகள் கிடைக்கும். அதாவது வெள்ளை கொண்டைக்கடலையை காய வைத்து பொடி செய்து அதனை சாப்பிட்டு வர சிறுநீர் அடைப்பு, சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமடையும்.
பொதுவாகவே கொண்டைக்கடலையை பலவிதமாக சமைத்து சாப்பிடலாம். குழம்பாகவோ, கிரேவியாகவோ அல்லது சாதாரணமாக வேக வைத்து சாப்பிட்டாலும் அதில் உள்ள சத்துக்கள் அப்படியே கிடைக்கும். கொண்டைக்கடலை வேக வைத்த தண்ணீரை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அத்துடன் ஒரு கைப்பிடி அளவு கொண்டைக்கடலையும் சாப்பிட்டால் நம் உடலுக்கு தேவையான புரோட்டின், இரும்புச்சத்து போன்றவை கிடைத்துவிடும். இதன் நன்மை அறிந்து தான் கொரோனா காலகட்டத்தில் கூட கொண்டைக்கடலை அதிகம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். மேலும் கொண்டைக்கடலையில் மெக்னீசியம், நார்ச்சத்து, சுண்ணாம்பு சத்து என அனைத்தும் நிறைந்துள்ளது. அடுத்ததாக ஊற வைத்த கொண்டைக்கடலை என்பது மாரடைப்பு நோயிலிருந்து நம்மை காக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கொண்டைக்கடலையில் இத்தனை பயன்கள் இருப்பதனால் தான் சத்து மிகுந்த நவதானியங்களில் ஒன்றாக இந்த கொண்டைக்கடலை பயன்படுத்தப்படுகிறது. எனவே வெள்ளை மற்றும் கருப்பு கொண்டைக்கடலையை சாப்பிட்டு நீங்களும் பயன்பெறுங்கள். இருப்பினும் உங்கள் மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.