பகல் ஷிப்டுகளில் பணியாற்றுபவர்களை விட, இரவு ஷிப்டில் வேலை செய்பவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அடிக்கடி ஷிப்டு மாறுதல், தூக்கமின்மை, இயற்கை உயிர் கடிகாரத்திற்கு (Biological Clock) ஏற்படும் பாதிப்பு காரணமாக உடல் பல மாற்றங்களை சந்திக்கிறது. இரவு நேரங்களில் வேலை செய்வது உடலின் இயற்கை தூக்க விழிப்பு சுழற்சியை கடுமையாக சீர்குலைக்கிறது. நைட் ஷிப்ட் பணியாளர்களுக்கு போதிய மற்றும் தரமான தூக்கம் கிடைக்காததால், உடலில் ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக பசி உணர்வை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் சீர்குலைந்து, அதிக உணவு உட்கொள்ளுதல், மெட்டபாலிசம் குறைதல் போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. இதனால் உடல் பருமன் அபாயம் அதிகரிக்கிறது.
மேலும், தொடர்ந்து தூக்கமின்மையால் உடலில் தீவிர உடல் மாற்றங்கள் ஏற்பட்டு, நீண்டகாலத்தில் வாழ்க்கை முறை நோய்கள் உருவாகும் அபாயமும் அதிகம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இரவு நேரங்களில் தாமதமாக சாப்பிடுவது அல்லது இரவு ஷிப்ட் வேலைக்கிடையில் குப்பை உணவுகளை (ஜங்க் புட்) அடிக்கடி உட்கொள்வது உடல்நலத்திற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தாமதமான உணவு பழக்கம் கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி உயர்ந்து, நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அதே நேரத்தில், கொழுப்பு மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகள் ரத்தக் கொழுப்பை உயர்த்தி, இதய நோய்கள் உருவாகவும் வழிவகுக்கின்றன. மேலும், இரவு நேரங்களில் உடலின் மெட்டபாலிசம் இயல்பாகவே மந்தமாக இருக்கும். அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக்கொண்டால், அவை சரியாக எரிக்கப்படாமல் உடல் பருமன், செரிமானக் கோளாறுகள், தூக்க பிரச்சினைகள் போன்ற பாதிப்புகளை உருவாக்கும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இரவு ஷிப்ட் பெண்களுக்கு அதிக அபாயம்: இரவு ஷிப்டுகளில் வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறிப்பாக, தொடர்ந்து இரவு நேரப் பணிகளில் ஈடுபடுவது ஹார்மோன் சமநிலையை பாதித்து, மாதவிடாய் தாமதம், அதிக வலி, முறையற்ற ரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகளை உருவாக்குகின்றது.
மேலும், இரவு ஷிப்ட் வேலைக்குச் செல்லும் பெண்கள் எண்டோமெட்ரியோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என ஆய்வு எச்சரிக்கிறது. கருப்பை உட்புறத் திசு கருப்பைக்கு வெளியே வளரும் இந்த நோய், உலகளவில் சுமார் 10 சதவீத பெண்களை பாதித்து வருகிறது. இதனால் அதிக வலி, கருத்தரிப்பு சிக்கல், மனஅழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் உருவாகலாம்.
இரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவோருக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தூக்கமின்மை, நீண்ட நேர மனஅழுத்தம், ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி குறைவு ஆகியவை இரவு ஷிப்ட் ஊழியர்களில் பொதுவாக காணப்படும் பிரச்சினைகளாகும். இவை அனைத்தும் சேர்ந்து உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு அளவு அதிகரிப்பு, ரத்தச் சர்க்கரை ஏற்றம் போன்ற சிக்கல்களை உருவாக்கி, இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. மேலும், இரவு நேரங்களில் கார்டிசோல் போன்ற மனஅழுத்த ஹார்மோன்கள் அதிகரிப்பதால், இதயத்தின் மீது கூடுதல் சுமை ஏற்படுகிறது. இதன் விளைவாக, நீண்டகாலத்தில் இதய அடைப்பு, இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
எனவே இரவு ஷிப்டில் பணியாற்றுவோர் போதிய தூக்கம், சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் இடையிடையே மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்
இரவு நேரங்களில் தொடர்ந்து பணியாற்றுவது உடலில் ஆற்றல் இழப்பையும் எடை அதிகரிப்பையும் ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இரவு ஷிப்ட் பணியாளர்கள், பகல் ஷிப்டில் பணிபுரிபவர்களுடன் ஒப்பிடும் போது, 24 மணி நேரத்தில் குறைந்த அளவே கலோரிகளை செலவிடுகின்றனர் என்பதும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூக்கமின்மையால் உடலின் மெட்டபாலிசம் மந்தமடைவதும், ஹார்மோன் சமநிலை பாதிப்பதால் பசி அதிகரிப்பதும், அதிக கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் அதிகரிப்பதும் இதற்குக் காரணங்களாக கூறப்படுகின்றன. இதன் விளைவாக, பயன்படுத்தப்படாத கலோரிகள் கொழுப்பாக சேமிக்கப்பட்டு எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஏற்படுகிறது.
சிவப்பு அரிசியை தொடர்ந்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?


