மன அழுத்தத்தினால் உடல் எடை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம் என்பது உடலில் கார்டிசோல் ஹார்மோன்களை ஊக்குவிக்கிறது. இது அதிக பசியை ஏற்படுத்துவதோடு தூக்கமின்மை பிரச்சனையையும் உண்டாக்குகிறது. அத்துடன் வளர்ச்சியை மாற்றத்தையும் பாதிக்கிறது. இதனால் தேவையில்லாத கொழுப்பு அதிகமாகி உடல் எடை அதிகரிக்கிறது. குறிப்பாக வயிற்றுப் பகுதியில் அதிகமான கொழுப்புகள் சேர வழிவகை செய்கிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.
அதிக அளவிலான மன அழுத்தம் இருந்தால் கார்போஹைட்ரேட் உணவுகள், ஆரோக்கியமற்ற உணவுகளின் மீது நாட்டம் உண்டாகும்.
மேலும் மன அழுத்தம் என்பது மெட்டபாலிசத்தின் வேகத்தை குறைக்க கூடிய வாய்ப்புகளும் அதிகம். இதனால் உணவின் குளுக்கோஸ் சரியாக எரிக்கப்படாமல் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இதன் விளைவாக உடல் எடை அதிகரித்து விடுகிறது.
மன அழுத்தம் என்பது தூக்கமின்மை பிரச்சனையை உண்டாக்குவதனால் அதிகப்படியான பசி உண்டாகிறது. மன அழுத்தத்தில் இருக்கும்போது உடற்பயிற்சி செய்ய மனம் ஒப்புக்கொள்ளாது. இதனால் உடல் எடை கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிக்கும். இவ்வாறு மன அழுத்தம் என்பது நேரடியாகவோ, மறைமுகமாகவோ உடல் எடையை அதிகரிக்கும் காரணமாகிறது.
ஆகையினால் மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும். இந்த வகையில் யோகா, தியானம் போன்றவைகள் மன அழுத்தத்தை சரி செய்ய உதவும். கட்டாயம் தினமும் 7 முதல் 8 மணி நேரங்கள் தூங்க வேண்டும். அத்துடன் சரியான உணவு பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும். மிதமான அளவில் உள்ள கார்போஹைட்ரேட் உணவுகளையும், அதிகமான புரதச்சத்து, நார்ச்சத்து உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வதை பழக்கமாக வேண்டும். மன அழுத்தத்தில் இருக்கும் போது தனிமையில் இல்லாமல் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேச வேண்டும். புத்தகங்களையும் படிக்கலாம். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகிய ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.