நமது உடலில் செரிமான அமைப்பு மிகவும் சென்சிட்டிவ் ஆனது. நாம் செய்யும் சில சின்ன சின்ன தவறுகள், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், ஜீரண சக்தியையும் நாளடைவில் பாதிப்படைய செய்துவிடுகின்றன. அப்படி நாம் சாப்பிட்ட உடனேயே செய்யக் கூடாத 5 விஷயங்கள் என்னென்ன என்பதனை காணலாம்.
நம்மில் பலர் செய்யும் தவறு என்னவென்றால், சாப்பிட்டு முடித்து கையை கழுவியவுடனேயே ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் குடிப்பது தான். இது மிகப்பெரிய தவறு. சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது, நமது வயிற்றில் உணவை ஜீரணிக்கச் சுரக்கும் அமிலங்களை நீர்த்துப் போகச் செய்துவிடுகின்றன. இதனால் அஜீரணம், வாயுத் தொல்லைகள் ஆரம்பமாகும். சாப்பிடுவதற்கு முன்போ அல்லது சாப்பிட்டு முடித்து 30 நிமிடங்களுக்குப் பிறகோ தண்ணீர் குடிப்பதுதான் சிறந்தது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.
இதுபோலவே டீ, காபியையும் சாப்பிட்டவுடன் குடிக்க கூடாது. உணவில் உள்ள இரும்புச்சத்து போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவது தடைபடுகிறது. இது நாளடைவில் ரத்தசோகைக்கு கூட வழிவகுக்கும்.

“சாப்பிட்டதும் கண்ணைச் செருகுதே” என்று அப்படியே படுக்கையில் சாய்வது பலரின் வழக்கமாகும். இது தவறான ஒன்றாகும். மேலும், இது செரிமான செயல்முறையை மிக மோசமாகப் பாதிக்கின்றன. படுக்கும்போது, இரைப்பையில் உள்ள அமிலம் மேல்நோக்கி வந்து நெஞ்செரிச்சலை உண்டாக்கும். மேலும், உடல் பருமன் அதிகரிக்க இது வழிவகுக்கிறது.
சாப்பிட்டவுடன் புகைபிடிப்பது என்பது மிக மோசமான பழக்கம். மற்ற நேரங்களில் சிகரெட் பிடிப்பதை விட, சாப்பிட்டவுடன் பிடிப்பது 10 மடங்கு அதிக தீங்கு விளைவிக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. இது செரிமான பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் அபாயத்தை நேரடியாக அதிகரிக்கிறது.
நம்மில் பலரும், “சாப்பிட்ட கவலையே இல்லாமல் உடற்பயிற்சி செய்யலாம்” என்று சாப்பிட்ட உடனே ஜிம்முக்குக் கிளம்பிவிடுவார்கள். இதுவும் ஆபத்தானது. நாம் சாப்பிட்டவுடன், நமது உடலின் ரத்த ஓட்டம் முழுவதும் செரிமான உறுப்புகளுக்குச் செல்ல வேண்டும். ஆனால், நாம் உடற்பயிற்சி செய்யும்போது, ரத்த ஓட்டம் தசைகளை நோக்கித் திரும்பிவிடும். இதனால், ஜீரணம் தடைபட்டு, வயிற்று வலி, வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடும். சாப்பிட்ட பின்பு குறைந்தது ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் கழித்து உடற்பயிற்சி செய்வது சிறந்தது.
சாப்பிட்டவுடன் லேசான நடைப்பயிற்சி செய்யலாம், ஆனால் கடினமான உடற்பயிற்சி கூடாது. இந்தச் சின்ன சின்ன வாழ்வியல் மாற்றங்களை நமது வாழ்க்கையில் கொண்டு வரும் போது, அது நமது செரிமான அமைப்பைப் பாதுகாத்து, நீண்ட கால ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும். உணவை ரசித்துச் சாப்பிடுங்கள், அதே சமயம், சாப்பிட்ட பிறகு உங்கள் உடலுக்கு ஜீரணம் செய்யத் தேவையான நேரத்தையும், சரியான சூழலையும் கொடுங்கள். ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவில் மட்டுமல்ல, நமது பழக்கவழக்கங்களிலும் இருக்கிறது.
காலை எழுந்ததும் தலைவலியா? – இதோ அலட்சியம் செய்யக்கூடாத முக்கிய காரணங்கள்!


