நம் கைகளை சுத்தமாக வைத்திருப்பது போலவே நகங்களை தூய்மையாக பராமரிப்பது அவசியம். நகங்களை அவ்வப்போது வெட்டி நகங்களுக்கு இடையில் இருக்கும் அழுக்குகளை அவ்வப்போது நீக்க வேண்டும். இல்லையெனில் நகங்களில் இருக்கும் அழுக்கு நாம் சாப்பிடும் பொழுது உணவுடன் கலந்து வயிற்றை சென்றடைந்து தீங்குகளை விளைவிக்கும். மேலும் நம்மை மிடுக்காக காட்டுவதற்கும் நகங்களின் பராமரிப்பு அவசியமாகிறது. நெயில் பாலிஷ் போன்ற தேவையில்லாத வேதிப்பொருட்களை தவிர்த்து வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நகங்களை தூய்மையாகவும் அழகாகவும் மாற்ற முடியும். அதற்கு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவிற்கு தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். பின்னர் இரு கைகளையும் இந்த கலவையில் முழுமையாக மூழ்கச் செய்து சுமார் 10 நிமிடங்களுக்கு பின்னர் கையை வெளியே எடுக்கவும். ஒரு சுத்தமான பருத்தி துணியால் நகங்களை நன்கு துடைக்கவும். தற்போது நகங்கள் பளிச்சென மின்னுவதை நம்மால் பார்க்க முடியும்.

அதுமட்டுமின்றி ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் 2 எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து சுமார் 15 நிமிடங்கள் கைகளை அதில் ஊற வைத்து பின்னர் சுத்தமான தண்ணீரில் கைகளை கழுவி காட்டன் துணியால் துடைக்க நகங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி பளபளப்பாக மாறும்.

நகங்களை கழுவிய பின்னர் மாய்சுரைசர் தேய்த்துக் கொள்வது நல்லது.
குறிப்பு:
இந்த முறைகள் கைகளுக்கு மட்டும் அல்லாமல் கால்களின் நகங்களுக்கும் பொருந்தும்.