பெண்கள் பலரும் பண்டிகை காலங்களில் உள்ளங்கைகள் சிவக்க, மருதாணி இலைகளை பறித்து அதனை அரைத்து கைகளில் அழகுக்காக பயன்படுத்தி வருகின்றனர். மருதாணி என்பது அழகுக்காக மட்டுமல்லாமல் உடலின் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுகிறது. அந்த வகையில் மருதாணியில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
முதலில் பெண்கள் கைகளில் மருதாணியை அரைத்து வைக்க ஒரு முக்கிய காரணம் மருதாணி என்பது கிருமி நாசினி. இது கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழிக்கக்கூடியது.

மருதாணி அரைத்து கையில் வைப்பதனால் நகங்களுக்கு எவ்வித நோயும் வராமல் பாதுகாக்கலாம். அந்த வகையில் நகச்சுத்தி ஏற்படுவதை இதனால் தடுக்க முடியும். அப்படி நகச்சுத்தி ஏற்பட்டாலும் கூட அப்புண்ணை ஆற்றும் திறன் மருதாணிக்கு உள்ளது.
மேலும் மருதாணியை அரைத்து தலையில் தேய்ப்பதனால் முடி கருகருவென வளரும்.
மருதாணியின் பூக்களைப் பறித்து அதனை உலர்த்தி தலையணையில் பரப்பி தூங்கினால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
மருதாணி இலைகளை நீரில் ஊற வைத்து வாய் கொப்பளித்து வர தொண்டை கரகரப்பு குணமடையும்.
மருதாணி இலைகளை நன்றாக அரைத்து அதனை வடை போன்று தட்டி நிழலில் காய வைத்து, பின் அதனை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி , தலைக்கு தேய்த்து வர கருமையான அடர்த்தியான தலைமுடி வளரும்.
அதே சமயம் இந்த மருதாணி எண்ணையை தலைக்கு தேய்த்து வருவதனால் உடல் உஷ்ணம் குறைந்து, கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும்.
மருதாணி பூக்கள், மருதாணி இலைகள் ஆகியவற்றின் சாறு எடுத்து அதனை அரை தேக்கரண்டி அளவு காலை, மாலை என இரு வேளைகள் சாப்பிட்டு வந்தால் தொழு நோய், மேகநோய் போன்றவை பரவாமல் தடுக்கலாம்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்பாடு குணமடைய மருதாணி இலையினை அரைத்து, பசும்பாலில் கலந்து நான் ஒன்றுக்கு இரு வேளை வீதம் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வர விரைவில் குணமடையும்.
கோடை காலங்களில் மருதாணியை அரைத்து கைகளிலும் உள்ளங் காலிலும் தேய்த்து வருவதனால் உடலின் சூடு தணிந்து, வெயிலினால் ஏற்படும் தோல் நோய்களும் வெம்மை நோய்களும் குணமாகும்.
இருப்பினும் இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.