கரும்புச்சாறு குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
கரும்புச்சாறு என்பது நம் பாரம்பரிய பானங்களில் ஆரோக்கியமான ஒன்றாகும். கரும்புச்சாறு, இயற்கையான குளுக்கோஸ் மற்றும் ப்ரக்டோஸ் நிறைந்தது. இது உடலுக்கு உடனடி ஆற்றல் தரும். வெயிலில் வேலை செய்பவர்களுக்கு இது உகந்ததாகவும், சூட்டை தணிக்கும் பானமாகவும் விளங்குகிறது. கோடைகாலத்தின் போது எலுமிச்சை மற்றும் இஞ்சி சாறுடன் கரும்புச்சாறு கலந்து குடிப்பதனால் உடல் புத்துணர்ச்சி பெறும்.
கரும்புச்சாற்றில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் ஆகியவை நிறைந்துள்ளதால் இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதில் இருக்கும் பொட்டாசியம் செரிமானத்தை மேம்படுத்த உதவும்.
இதில் இருக்கும் இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடல் பலத்தை தரும். மேலும் கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை பற்களுக்கும், ஈறுகளுக்கும் நன்மை தருகிறது. இது தவிர நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நுண்கிருமிகள் தாக்குதிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. அடுத்தது இது கல்லீரலை நச்சுத் தன்மையிலிருந்து பாதுகாக்க உதவுவதோடு, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி சிறுநீரை சீராக வெளியேற்ற உதவுகிறது.
இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலின் செல்களை புதுப்பித்து தோல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு இது இயற்கையாகவே இரும்புச்சத்து, ஃபோலேட் ஆகியவற்றை தருகிறது. இருப்பினும் கர்ப்ப காலத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் காரணத்தால் அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறந்தது.



