கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியவை கீழ்கண்டவாறு:
கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவது மிகவும் பொதுவான ஒன்று. ஆனால் அதை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. இரும்புச்சத்து தான் ஹீமோகுளோபின் உருவாக முக்கிய பங்கு வைக்கிறது. அதிலும் கர்ப்ப காலம் என்பது குழந்தைக்கும், தாய்க்கும் ரத்தம் அதிகம் தேவைப்படும் நேரம் என்பதால் உடலில் உள்ள இரும்புச்சத்து பற்றாக்குறையால் ஹீமோகுளோபின் குறையும். கர்ப்பத்தின் போது தாயின் ரத்தத்திலிருந்து ஒரு பகுதி குழந்தையின் வளர்ச்சிக்காக செல்வதனால் ஹீமோகுளோபின் குறையும். கர்ப்பத்தில் உணவின் மூலம் போதுமான அளவு போலிக் ஆசிட், வைட்டமின் பி12 ஆகியவை கிடைக்காவிட்டாலும் ஹீமோகுளோபின் குறையும். இது தவிர உணவில் கீரை வகைகள், பருப்பு வகைகள், பழங்கள் போன்றவற்றை சேர்க்காமல் இருந்தால் ஹீமோகுளோபின் குறைய வாய்ப்புள்ளது. சில உடல் பிரச்சினைகள் காரணமாகவும் ஹீமோகுளோபின் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு பல காரணங்களால் ஹீமோகுளோபின் அளவு குறைவதை தடுக்க கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து பச்சைக் கீரை வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் முருங்கைக்கீரை மிகவும் நல்லது. மேலும் பச்சை சுண்டைக்காய் எடுத்துக்கொண்டால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
இது தவிர பருப்பு வகைகள், உலர் திராட்சை, அத்திப்பழம், பேரிச்சம்பழம், மாதுளை, பீட்ரூட், ஆப்பிள், ஆரஞ்சு, மீன், முட்டை ஆகியவை ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க உதவும். அதே சமயம் காபி, டீ குடிப்பதை கர்ப்பிணி பெண்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது இரும்புச்சத்து உறிஞ்சப்படுதலை தடுப்பதனால் ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.