சளி, காய்ச்சல் நெருங்காமலிருக்க குளிா்காலத்தில் இந்த 5 வழிகளை செய்து பாருங்கள்.
மஞ்சள் மற்றும் மிளகு கலந்த பால் (Haldi Doodh/Golden Milk):
மஞ்சள் பால் அல்லது கோல்டன் மில்க் என்பது இந்தியாவின் பாரம்பரிய மருந்துப் பொருட்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.

மஞ்சளில் உள்ள முக்கியப் பொருள் குர்குமின் (Curcumin) ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்த வீக்கத்தைக் (Anti-inflammatory) குறைக்க உதவுகிறது. ஆக்ஸிஜனேற்றப் பண்புகளைக் (Antioxidant Properties) கொண்டது. குர்குமின், சளி மற்றும் காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. பாலில், மிளகைச் சேர்த்து அருந்தும்போது, மிளகில் உள்ள பைப்பரின் (Piperine) என்ற கூட்டுப்பொருள், மஞ்சளில் உள்ள குர்குமினை உடல் எளிதாக உறிஞ்சிக் கொள்ள உதவியாக உள்ளது. தினமும் இரவு தூங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் மிதமான சூடுள்ள மஞ்சள் பால் அருந்துவது, தொண்டைக் கரகரப்பு மற்றும் உடல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இரவில் நல்ல தூக்கத்தையும் அளிக்கிறது.
இஞ்சி மற்றும் பூண்டு துவையல் அல்லது ரசம்:
இஞ்சி மற்றும் பூண்டு இரண்டும் மிகச் சிறந்த இயற்கையான ஆன்டிவைரல் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகளைக் கொண்டவை. இஞ்சியில் ஜிஞ்சரால் (Gingerol) மற்றும் பூண்டில் அல்லிசின் (Allicin) போன்ற முக்கியப் பொருட்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலின் வெப்பத்தையும் பராமரிக்க பொிதும் உதவியாக உள்ளது. குளிர்காலத்தில், தினமும் இஞ்சி மற்றும் பூண்டு கலந்த துவையலைச் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவது அல்லது இஞ்சி மற்றும் பூண்டுத் துகள்களை அதிகமாக்கிய மிளகு ரசம் வைத்துக் குடிப்பது போன்றவைகளை மேற்க் கொள்வதால், சளியை வெளியேற்றவும், சுவாசப் பாதையில் உள்ள அடைப்புகளை நீக்கவும் இது உதவுகிறது. மேலும், செரிமானத்திற்கும் (Digestion) இது உதவுகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் ஜீரணப் பிரச்சனைகளையும் தீர்க்கிறது.
நெல்லிக்காய் (Amla) மற்றும் சிட்ரஸ் பழங்கள்:
நெல்லிக்காய் என்பது வைட்டமின் சியின் ஒரு மிகச் சிறந்த மூலமாகும். வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. சளி மற்றும் காய்ச்சல் வராமல் தடுப்பதிலும், வந்த பிறகு அதன் தீவிரத்தைக் குறைப்பதிலும், இது உதவுகிறது. நெல்லிக்காயைத் தவிர, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் வகை பழங்களிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. குளிர்காலத்தில், தினமும் காலையில் நெல்லிக்காய்ச் சாறு அருந்துவது அல்லது பச்சையாகச் சாப்பிடுவது, உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின் சியை அளிக்கிறது. இந்தப் பழங்களில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், உடல் செல்களைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.
வெல்லம் மற்றும் உலர் பழங்கள் (Jaggery and Dry Fruits):
குளிர்காலத்தில் உடல் வெப்பத்தைப் பராமரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது வெல்லம் (நாட்டுச்சர்க்கரை). இது இயற்கையான முறையில் உடலுக்கு வெப்பத்தை அளிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தாதுக்கள் (Minerals) மற்றும் இரும்புச் சத்தையும் கொண்டுள்ளது. தினமும் சர்க்கரைக்குப் பதிலாகச் சிறிதளவு வெல்லத்தைப் பயன்படுத்துவது மிக சிறந்தது. அத்துடன், பாதாம், அக்ரூட் (Walnuts) மற்றும் காய்ந்த திராட்சை (உலர்ந்த திராட்சை) போன்ற உலர் பழங்களைச் சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. உடலின் உட்புறச் செயல்பாட்டை வலுப்படுத்த உதவுகிறது. பாதாமில் வைட்டமின் இ நிறைந்து காணப்படுவதால், இது சருமத்தை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
மூலிகைத் தேநீர் மற்றும் கஷாயம் (Herbal Tea and Kashayam):
பாரம்பரியமாகவே நம் நாட்டில், துளசி, வெற்றிலை, மிளகு, மஞ்சள், ஓமம், சுக்கு போன்ற பொருட்களைச் சேர்த்துச் செய்யப்படும் கஷாயம் என்பது நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும். இந்த மூலிகைகள் அனைத்தும் சுவாசப் பாதையில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, சளித் தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும் சக்தி கொண்டவை. துளசியில் உள்ள வேதிப்பொருட்கள், நுரையீரலைச் சுத்தப்படுத்த உதவுகின்றன. தினசரி காபி அல்லது டீக்கு பதிலாக, இந்த மூலிகைகளைச் சுடு தண்ணீரில் போட்டுச் செய்யப்படும் ஹெர்பல் டீயைச் சாப்பிடுவது, உடலுக்கு உள்ளிருந்து ஒரு பாதுகாப்பை அளித்து, சளி, காய்ச்சல் வருவதைத் தடுக்க உதவுகின்றது.


